கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த செங்கோடி மாத்தார் பகுதியை சேர்ந்தவர் பிரவின்(22). டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றும் இவருக்கும் அணைக்கரை பகுதியை சேர்ந்த சேர்ந்த ஜெஸ்லின்(19) என்ற கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஜெஸ்லின் வீட்டில் வெல்டிங் வேலைக்குச் சென்ற அறிமுகத்தால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நெருங்கி பழகிய நிலையில் ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும்படி பிரவினிடம் கூறியுள்ளார். இதையடுத்து பிரவின் தனது பெற்றோர்களுடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டுள்ளார். இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில் இரண்டு வருடத்திற்கு பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என வீட்டார் முடிவு செய்திருக்கிறார்கள். இதையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்துள்ளனர். காதலிக்கும் காலத்தில் ஜெஸ்லினுக்கு பல பரிசு பொருள்களை பிரவின் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் ஜெஸ்லின் கடந்த ஒரு மாதமாக பிரவினிடம் சரியாக பேசாமல் இருந்துள்ளார். அவரின் நடவடிக்கையிலும் மாற்றம் தெரிந்துள்ளது. இதுபற்றி பிரவின் விசாரித்தபோது ஜெஸ்லினுக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கியாஸ் ஏஜென்சியில் டிரைவராக இருக்கும் ஜெனித் என்பவருக்கும் புதிதாக காதல் மலர்ந்த விஷயம் தெரியவந்திருக்கிறது. இருவரும் பைக்கில் ஜோடியாக வலம் வந்துள்ளதை பிரவின் பார்த்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரவின் ஜெஸ்லினிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் ஜெனித்தை விரும்புவதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டாராம்.
இதனால் மனமுடைந்த பிரவின் சோகமாகிவிட்டாராம். “நான் காதலித்தபோது கொடுத்த பரிசு பொருள்களை திரும்ப கொடு” என பிரவின் கேட்டுள்ளார். ஜெஸ்லினும் பரிசு பொருள்களை திரும்ப கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். நாளை தருகிறேன் என நாளை கடத்தியவர் நேற்று முன்னாள் காதலன் பிரவினை வேர்கிளம்பி பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். பிரவின் தனது பைக்கில் அங்கு சென்றுள்ளார். அப்போது புதிய காதலனுடன் பைக்கில் வந்திருக்கிறார். அப்போது தனது காதல் பரிசுகளை தரும்படி பிரவின் கேட்டுள்ளார். அப்போது திடீரென பைக்கில் வந்த இரண்டு பேர் திடீரென பிரவினின் பைக் மீது மோதி அவரை கீழே தள்ளிவிட்டுள்ளனர். பின்னர் சரமாரியாக பிரவினை தாக்கியுள்ளனர். முன்னாள் காதலன் பிரவின் அடி வாங்குவதை புதிய காதலன் ஜெனித்துடன் சேர்ந்து ரசித்திருக்கிறார் ஜெஸ்லின்.
இதையடுத்து அங்கு பொதுமக்கள் திரண்டதால் ஜெஸ்லின் மற்றும் பிரவினை தாக்கியவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். தாக்குதலால் காயமடைந்த பிரவின் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தார். தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா வீடியோ ஆதாரங்களுடன் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் பிரவின் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் முன்னாள் காதலனை ஜெஸ்லின் கூலிப்படை மூலம் தாக்கியதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரவினின் முன்னாள் காதலி ஜெஸ்லின் மீதும், அவரது புதிய காதலன் ஜெனித்(20) மீதும், பிரவினை தாக்கிய ஜோஸ்(30) மற்றும் ஒருவர் மீதும் கொற்றிக்கோடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர். பரிசுகளை திரும்பக்கேட்ட முன்னாள் காதலனை கூலிப்படையை ஏவி தாக்கிய சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.