புவனேஷ்வர்: ஒடிசாவில் தான் படித்த பள்ளி, தங்கியிருந்த விடுதியை பார்வையிட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, பள்ளி பருவ தோழிகளை சந்தித்து பேசினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஒடிசா சென்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சொந்த மாநிலத்துக்கு சென்ற அவர், பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலுக்கு 2 கிமீ பாத யாத்திரையாக நடந்து சென்று தரிசனம் செய்தார். இரண்டாவது நாளான நேற்று கந்தகிரியில் உள்ள தபாபனா உயர்நிலைப் பள்ளியை பார்வையிட்டு நெகிழ்ந்தார். அவரை பள்ளி மாணவர்கள் வரவேற்றனர்.
மாணவர்களிடம் கலந்துரையாடிய முர்மு கூறுகையில், ‘நான் உபர்பேடா கிராமத்தில் பள்ளி படிப்பை தொடங்கினேன். அங்கு பள்ளிக் கட்டிடம் கிடையாது. கூரை தான் இருக்கும். வகுப்பறை, பள்ளி வளாகத்தை பெருக்கி, சாணத்தால் மெழுகுவோம். எங்கள் காலத்தில் இன்டர்நெட், தொலைக்காட்சி மற்றும் வெளியுலகை தெரிந்து கொள்வதற்கான இதர வசதிகள் இல்லை. இன்றைய குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள்,’ என தெரிவித்தார். தொடர்ந்து தான் தங்கியிருந்த குந்தலா குமாரி சமாத் பழங்குடியினர் விடுதிக்கு அவர் சென்றார். இந்த விடுதியில் தான் அவர் 4 ஆண்டுகள் தங்கியிருந்தார். தான் பயன்படுத்திய விடுதி அறையின் கட்டிலில் அமர்ந்த அவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த அவருடன் பள்ளியில் படித்த 13 முன்னாள் மாணவ, மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் அவர் நட்டார்.