மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மெல்போர்னில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஏறக்குறைய 1 லட்சம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் அரங்கேறும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத இருப்பது இது 3-வது முறையாகும். இதற்கு முன் 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் லீக் சுற்றில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. அதே சமயம் அந்த ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் தான் வென்றது.
அடுத்து 2010-ல் வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை தொடரின் போது இவ்விரு அணிகளும் ‘சூப்பர் 8’ சுற்றில் சந்தித்தன. இதில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. மேலும் அந்த ஆண்டு உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு வருணபகவான் வழிவிடுவாரா என்பது பலத்த கேள்விக்குறியாகி இருக்கிறது. நாளை மெல்போர்னில் 15 முதல் 25 மில்லி மிட்டர் வரை மழை பெய்ய 95 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது.
இறுதிப்போட்டிக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) வசதி உண்டு. அதாவது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மாற்று நாளாக அறிவிக்கப்பட்டுள்ள அடுத்த நாளில் (திங்கட்கிழமை) போட்டி நடத்தப்படும். ஆனால் இரண்டு நாட்களும் மழை காரணமாக ஆட்டம் நடத்த முடியாத நிலை உருவானால் இரு அணிகளும் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்படும்.
லீக் சுற்றில் இரு அணிகளும் குறைந்தபட்சம் 5 ஓவர்கள் ஆடி முடித்து இருந்தால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றியாளர் முடிவு செய்யப்படுவது வழக்கமாகும். ஆனால் நாக்-அவுட் சுற்று போட்டியில் முடிவு தெரிய இரு அணிகளும் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் விளையாடி முடித்து இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
மழை குறுக்கிட்டால் ஓவர் குறைத்தாவது போட்டியை நடத்த முன்னுரிமை அளிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மழையால் ஓவர் குறைத்து ஆட்டம் தொடங்குவதாக அறிவித்த பிறகு, அந்த நாளில் ஆட்டம் நடக்கவில்லை என்றால் மாற்று நாளில் முழுமையாக 20 ஓவர் கொண்டதாக போட்டி நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் தொடங்கி குறிப்பிட்ட நேரத்துக்குள் முடியாமல் போனால் மறுநாளில் அந்த போட்டி முந்தைய நாள் நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.