சென்னை: “சென்ற முறையை விட இந்த முறை சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு 2 மடங்கு ஆதரவு பெருகி உள்ளது. இதற்கு தமிழக மக்களுக்கு நன்றி” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை – தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், “தலைவர்கள், தொண்டர்கள் என்று அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். நேற்று பிரதமர் மோடி திண்டுக்கல் வந்தார். நேற்றிலிருந்து இன்று வரை உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் இருந்துள்ளார். மேலும், நமது அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களை சந்தித்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
நேற்று திண்டுக்கலில் கொட்டும் மழையில் பொதுமக்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். இது மிகவும் நெகிழ்ச்சியான தருணம். பிரதமர் திண்டுக்கல்லில் பேசும்போது, காசி தமிழ் சங்கமம் குறித்து பேசினார். தமிழகத்தில் இருந்து 19-ம் தேதி காசி வரும் முதல் குழுவை வரவேற்க நான் அங்கு இருப்பேன் என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கு பெறுவேன் என்று தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் சென்னையில் பேசும்போது பல கருத்துகளை தெரிவித்தார். அதில் மிக முக்கியமாக தமிழ் மொழியின் தொன்மையை பறைசாற்றுவது இந்தியர்களின் கடமை என்று அமித் ஷா கூறினார். மேலும், தமிழ் வழியில் மருத்துவக் கல்வி வழங்க வேண்டும் என்ற ஆலோசனையை மாநில அரசுக்கு வழங்கினார். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் படிக்க 1300 இடங்கள் உள்ளன. ஆனால் 50 பேர் தமிழ் மொழியை பயிற்று மொழியாக எடுத்து படிப்பதாக கூறினார். மேலும், 50 மாணவர்கள் மட்டுமே படிப்பது வருத்தமாக உள்ளது என்றும், எனவே மாநில அரசு முயற்சி எடுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
தாய்மொழிதான் பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்பதில் அமிஷ் தா உறுதியாக உள்ளார். சென்ற முறையை விட இந்த முறை சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு 2 மடங்கு ஆதரவு பெருகி உள்ளது. இதற்கு தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தேசியத் தலைவர் தலைமையில் கட்சியில் இணைவதுதான் எங்களது கட்சியின் வழக்கம். ஆனால், நிறைய பேர் பாஜகவில் நேரம் கேட்டு காத்துக் கொண்டு உள்ளனர். நேரம் வரும் அவர்கள் கட்சியில் சேர்க்கப்படுவார்கள்.
அமிஷ் தா ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும், கட்சி சார்பாக என்ன வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நேற்று திண்டுக்கலில் இருந்து மதுரை செல்லும்போதும் ஒரு மணி நேரம் பிரதமரிடம் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 2024 தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் அது இல்லை” என்று அண்ணாமலை கூறினார்.