திண்டுக்கலில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ” “குஜராத்தில் பிறந்து ஒற்றுமையையும், சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்த அண்ணல் காந்திக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு மிக மிக அதிகம். தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள மகாத்மா காந்தி, தமிழை மிகவும் விரும்பிக் கற்றவர். மோ.க.காந்தி என தமிழில் கையெழுத்திட்டவர். திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழ் கற்க வேண்டும் என்று சொன்னவர். இவை அனைத்துக்கும் மேலாக உயராடை அணிந்து அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த அவரை அரையாடை கட்ட வைத்தது இந்தத் தமிழ் மண்.
வட இந்தியாவினர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும், அது தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் காந்தி. அத்தகைய காந்தியடிகள் பெயரால் அமைந்த பல்கலைக்கழகத்தில் இந்தப் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களைத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில் வருக வருக வருக என வரவேற்கிறேன்.” என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழ் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இவை கலை, அறிவியல், பொறியியல், கல்வியியல், விளையாட்டு, கால்நடை, மருத்துவம், மீன்வளம், தமிழ்வளர்ச்சி, சட்டம், வேளாண்மை மற்றும் இசை ஆகிய துறைகளின்கீழ் திறம்பட செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு, இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாகத் திகழ்கிறது. இதனை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு கல்வித் திட்டங்களைத் தீட்டி வருகிறது.
பெண்களின் உயர்கல்வியினை ஊக்குவிக்க “புதுமைப் பெண்” என்கிற மூவலூர் இராமாமிர்தம்மாள் பெயரில் உயர்கல்வி உறுதித் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில நிதியுதவித் திட்டம் போன்றவற்றின் மூலமாக அனைவரும் உயர்கல்வி பயில தமிழ்நாடு அரசு ஆவன செய்து வருகிறது. நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, கல்லூரிக் கனவு என்பது போன்ற பல்வேறு கல்வித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும்” என்றும் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.