புதுடெல்லி: ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையில் உதித்தது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி’’ என்று பல சிறப்பு தகவல்களை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் அதன் அமைப்பாளர் சாமுகிருஷ்ண சாஸ்திரி பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியாக இருப்பது உத்தர பிரதேசத்தின் வாரணாசி. தெய்வீக நகரமான வாரணாசியுடன் பல நூற்றாண்டுகளாக தமிழகம் கொண்டுள்ள உறவு, பாரம்பரியம், கலாச்சாரத்தின் அடையாளமாக காசி தமிழ்ச் சங்கமம் அமைய உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி உத்தரவின்படி மத்திய அரசின் கல்வித் துறை முன்னின்று நடத்துகிறது. இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, ரயில்வே மற்றும் ஜவுளித் துறை அமைச்சகங்களுடன், உ.பி. மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
இதற்காக தமிழகத்தில் இருந்து சுமார் 2,500 பேர் ரயில்களில் அழைத்துவரப்பட உள்ளனர். சுமார் 200 பேர் கொண்ட 12 குழுக்களுக்கு தலா 8 நாட்கள் பயணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. நவம்பர் 17-ம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெற உள்ள சங்கமம் நிகழ்ச்சியில் சுமார் 4,000 தமிழர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் அமைப்பாளரும் சம்ஸ்கிருத அறிஞரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பேராசிரியர் சாமுகிருஷ்ண சாஸ்திரி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம், பல சிறப்பு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய பாஷா சமிதியின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் சாமுகிருஷ்ண சாஸ்திரி கூறியதாவது:
நமது புதிய கல்விக் கொள்கையின் ‘ஒரே நாடு, ஒரே கல்வி’ அடிப்படையில் ஒரு சிறப்பு முன்னுதாரண நிகழ்ச்சியாக காசி தமிழ்ச் சங்கமம் நடத்தப்படுகிறது. இதில் நேரடி பங்குள்ள மாணவர்கள் மட்டுமன்றி கல்வியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள்,கலைஞர்கள், தொழில் முனைவோர், வியாபாரிகள், கைவினைஞர்கள், ஆன்மீகவாதிகள், இலக்கியவாதிகள், விவசாயிகள், கோயில் சார்ந்தவர்கள் உள்ளிட்ட 12 குழுக்களில் இவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு குழுவினருக்கும் 8 நாட்கள் பயண ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில், 4 நாள் ரயில் பயணம் போக, 2 நாட்களுக்கு வாரணாசி, சாரநாத் போன்ற முக்கிய இடங்களைப் பார்வையிடுவார்கள். அத்துடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பார்கள். ஒருநாள் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்துக்கும் மறுநாள் அயோத்தியாவுக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இதுபோன்று காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தும் யோசனை, உருவாக்கம் என அனைத்தும் பிரதமர் மோடியுடையது. தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து வருகிறார்.
இது மாபெரும் சங்கம விழாவாக வாரணாசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. நூல்கள், கலை, பண்பாடு, ஓவியங்கள், கண்காட்சி, கருத்தரங்குகள், பயிலரங்கங்கள், கலந்துரையாடல்கள், 30 வகையான நாட்டுப்புறக் கலைகள், நாட்டியங்களுடன் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவை அனைத்தும் முழுக்க முழுக்க தமிழக பாரம்பரியத்தை உலகளவில் வெளிப்படுத்தும் வகையிலேயே அமையும்.
வாரணாசி அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்க உள்ளனர். இதன்மூலம், தமிழக மக்களின் அறிவு, வாழ்க்கை முறை போன்ற பல்வேறு பரிமாணங்களை மற்றவர்களும் அறிய முடியும். இவ்வாறு சாஸ்திரி தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து வாரணாசி செல்வதற்கு சென்னை கங்கா காவேரி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் வாரணாசி எக்ஸ்பிரஸ், கேரளாவில் இருந்து கோவை வழியாக செல்லும் சிறப்பு ரயில் என 3 ரயில்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 210 பயணிகளுக்காக அலங்கரிக்கப்பட்ட 3 சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. ஒரு வாரத்தில் இந்த 3 ரயில்கள் என 4 வாரங்களுக்கு 12 குழுக்கள் காசி சென்று திரும்புகின்றன. இந்நிகழ்ச்சியில் பங்கு பெற மத்திய கல்வித்துறை சார்பில் தமிழக அரசுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை தமிழக அரசு சார்பில் எந்த வகையிலான பங்கு இருக்கும் என்ற தகவல் இல்லை.