பிரான்ஸில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பெண்ணின் கையில் வளர்ந்த மூக்கை அவரது முகத்திற்கு வெற்றிகரமாக மாற்றினர்.
பிரான்ஸில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள், புற்றுநோய் சிகிச்சையின் போது பெண் ஒருவர் தனது மூக்கின் பெரும் பகுதியை இழந்ததால், அவரது கையில் மூக்கை வெற்றிகரமாக வளர்த்து, அதை அவரது முகத்தில் பொருத்தியுள்ளனர்.
புற்றுநோய்க்கு சிகிச்சை
துலூஸ் நகரத்தைச் சேர்ந்த அப்பெண்மணி 2013-ல் நாசி குழி புற்றுநோய்க்கு (Nasal Cavity Cancer) ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை பெற்ற பிறகு மூக்கின் ஒரு பகுதியை இழந்தார்.
Facebook/Chu de Toulouse
செயற்கை மூக்கு மற்றும் மூக்கை புனரமைக்கும் முயற்சிகள் தோல்வியுற்றதால் அவர் மூக்கு இல்லாமல் பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்தார்.
புதிய மூக்கு
ஆனால் இப்போது, ஒரு புதிய மருத்துவ முறையின் மூலம், அவரால் ஒரு புதிய மூக்கைப் பெற முடிந்தது, அதுவும் அவரது உடலிலேயே வளர்த்துக்கொண்டது.
குருத்தெலும்புக்கு பதிலாக 3D-அச்சிடப்பட்ட உயிர் மூலப்பொருளால் செய்யப்பட்ட ஒரு தனிப்பயன் மூக்கு அவருக்காக தயாரிக்கப்பட்டு, பின்னர் அவரது முன்கையில் பொருத்தப்பட்டது.
அதன் பிறகு மருத்துவர்கள் அவரது நெற்றியின் பக்கவாட்டிலிருந்து எடுக்கப்பட்ட தோலைப் பயன்படுத்தி 3D-அச்சிடப்பட்ட மூக்கை மூடினர். அது இரண்டு மாதங்களுக்கு வளர அனுமதிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அப்பெண்ணின் கையில் இருந்து எடுத்து முகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது.
துலூஸ் மருத்துவமனை
துலூஸ் யுனிவர்சிட்டி ஹாஸ்பிட்டல் (CHU), அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் முன்கையில் வளரும் மூக்கின் படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த பெண்ணின் முகத்தில் செவ்வாய்க்கிழமை புதிய மூக்கு பொருத்தப்பட்டதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
மருத்துவர்கள் நுண் அறுவை சிகிச்சை முறையை பயன்படுத்தி, கை தோலில் உள்ள இரத்த நாளங்களை பெண்ணின் முகத்தில் உள்ள இரத்த நாளங்களுடன் இணைத்தனர்.
10 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்று வார நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்குப் பிறகு, அப்பெண் மிகவும் நன்றாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறினர்.
Dailymail