”தேர்தலில் அதிமுக தனித்து நிற்கும்; இப்படி எந்த கட்சியாலும் சொல்லமுடியாது. அதிமுகவுக்கு ஓட்டு அப்படியே இருக்கு. பெரியாரின் கொள்கைகளால் தமிழகத்தில் திராவிடம் நிலைக்கு நிற்கிறது” என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பாஜக-வை சாடினார்.
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலத்தில் இன்று நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம், தாளவாடி, பவானிசாகர், கடமபூர் மற்றும் புஞ்செய் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பாஜகவை மறைமுகமாக தாக்கி பேசினார்.
அப்போது, “வரும் மக்களை தேர்தலில் அதிமுகவால் தனித்து நிற்கமுடியும். வேறு எந்த கட்சியாலும் முடியாது. காரணம் அதிமுக ஓட்டு அப்படியே இருக்கிறது. தொண்டர்கள் உற்சாகமாக வேலை செய்கின்றனர். மனித நேயமிக்க தலைவர்கள் இருந்ததாலும் பெரியாரின் கொள்கைகளாலும் தமிழகத்தில் திராவிடம் நிலைத்து நிற்கிறது. சாதியை ஒழித்தவர் எம்ஜிஆர். அதிமுகவுக்கு ஆதரவாக வாக்காளர்களை சேர்க்க வேண்டும். குறிப்பாக அதிமுகவுக்கு ஓட்டு போடுபவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும்.
தற்போது ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் ஆகிவிட்டது. எதிர்கட்சியினர் 1000 தருகின்றனர். நம்ம கட்சி 1500 தருமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. மக்களிடத்தில் ஒருமுறை மட்டுமே 1500 பணம் கிடைக்கும். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டு முழுவதும் பணம் கிடைக்கும் என மக்களிடத்தில் எடுத்துச் சொல்லுங்கள்” என்று பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM