குலசேகரம்: பேச்சிப்பாறை அருகே பொன்னியாகுளம் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் தேம்பாவு என்ற காட்டுமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் சுமார் 60 அடி உயரம் கொண்டது. தற்போது முழுமையாக பட்டுபோய் இருக்கும் இந்த மரத்தின் அடிப்பகுதியும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மரத்தின் அருகே பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஏடிஎம் மையம் என வரிசையாக அமைந்துள்ளது. இதனால் எப்போதும் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இந்த ராட்சத மரம் எந்நேரமும் சாய்ந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிவழியாக மின் கம்பிகளும் செல்வதால் இந்த மரம் சாய்ந்து விழும் பட்சத்தில் பெருத்த அளவில் காயமோ அல்லது உயிர் சேதமோ ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆபத்தான நிலையில் நிற்கும் இந்த மரத்தை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என பேச்சிப்ப்பறை ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜன் மற்றும் அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.