திருவனந்தபுரம்: தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் பகுதியை சேர்ந்தவர் கொடுங்குசாமி. இவரது மனைவி முத்தாபரணம் (60). கடந்த சில வருடங்களாக இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தங்கியிருந்து பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் அங்குள்ள பெருமன்புரா என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். முத்தாபரணத்திற்கு புஷ்பராஜ் என்ற மகனும், திருமண வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக சிறுகச் சிறுக ₹50 ஆயிரம் பணத்தை சேமித்து வைத்திருந்தார்.
தான் வசிக்கும் வீட்டில் வைத்திருந்தால் யாராவது திருடிச் சென்று விடுவார்களோ என பயந்து அந்தப் பணத்தை தினமும் வேலைக்கு செல்லும்போது இடுப்பில் கட்டி வைத்திருப்பார். நேற்று காலையும் வழக்கம்போல பணத்தை இடுப்பில் கட்டி வைத்துக்கொண்டு முத்தாபரணம் தன்னுடைய தொழில் தேடி வெளியே சென்றார். அங்குள்ள குற்றிக்காட்டூர் என்ற பகுதியில் வைத்து திடீரென பார்த்தபோது மடியில் இருந்த ₹50 ஆயிரம் பணத்தை காணவில்லை. வழியில் அது எங்கோ விழுந்து விட்டது. மகளின் திருமணத்திற்காக கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணம் போய்விட்டதே என்று முத்தாபரணம் கலங்கினார்.
போலீசில் புகார் செய்தால் பணத்தை கண்டுபிடித்து தருவார்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறினர். உடனடியாக முத்தாபரணம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று தன்னுடைய பணம் மாயமானது குறித்து கூறினார். இன்ஸ்பெக்டர் பென்னி லாலு தலைமையிலான போலீசார் பணம் கீழே விழுந்ததாக கூறிய குற்றிக்காட்டூர் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்த போது ஒருவர் கீழே விழுந்து கிடந்த முத்தாபரணத்தின் பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
அந்த நபர் யார் என்ற விவரம் முதலில் தெரியாமல் இருந்தது. அவரை கண்டுபிடிப்பதற்காக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் வாட்ஸ்அப் உள்பட சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். சிறிது நேரத்திலேயே முத்தாபரணத்தின் பணத்தை எடுத்துச் சென்றவர் குறித்த விவரம் போலீசுக்கு கிடைத்தது. போலீசார் உடனடியாக விரைந்து செயல்பட்டு அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
கீழே கிடந்த பணத்தைத் தான் எடுத்துச் சென்றதாகவும், பணத்தை திருடவில்லை என்றும் கூறி அவர் போலீசிடம் மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து அவரிடமிருந்து போலீசார் பணத்தை வாங்கி முத்தாபரணத்திடம் ஒப்படைத்தனர். மகளின் திருமணத்திற்காக கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணம் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் போலீசுக்கு நன்றி தெரிவித்துவிட்டு முத்தாபரணம் அங்கிருந்து சென்றார்.