திருவண்ணாமலை: மாலத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில், தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த பெண் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியானார்கள். அதில், தமிழகத்தை சேர்ந்த 3 பேர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களுடைய விவரங்கள் குறித்து விசாரணை நடந்தது.
அதில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, மலையனூர்செக்கடி ஊராட்சிக்கு உட்பட்ட மல்காபூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி தேன்மொழி(45) என்பது உறுதியானது.
இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்ததும் தண்டராம்பட்டு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் மல்காபூர் கிராமத்துக்கு நேரில் சென்று, தேன்மொழியின் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். தமிழக அரசின் உத்தரவுபடி, தேன்மொழியின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் செய்யப்படுவதாக கூறினர். தீ விபத்தில் பலியான தேன்மொழி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவரது மகள் ஜெயபிரியாவுக்கு திருமணமாகிவிட்டது. தேன்மொழி கடந்த 10 ஆண்டுகளாக மாலத்தீவில் வீட்டு வேலை செய்வதால், அவரது மகன் ஜெயபிரகாஷ்(14) என்பவர் தாத்தா பாட்டியின் பராமரிப்பில் உள்ளார். வெளி நாட்டில் வேலைக்கு சென்ற பெண், தீ விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.