புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
1991 மே 21-ல் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, பேரறிவாளன் உள்பட 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் உத்தரவிட்டது.
பின்னர், முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் வேண்டுகோளை ஏற்று, நளினியின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து அப்போதைய ஆளுநர் உத்தரவிட்டார். அதேபோல, 2014-ல் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனை யாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு 2014 பிப்.14-ம் தேதி முடிவெடுத்தது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு, 7 பேரின் விடுதலை தொடர்பாக 2018 செப்டம்பர் மாதம் அதிமுக அமைச்சரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதற்கிடையில், தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், அஜய் ரஸ்தோகி, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது ஷரத்தின் கீழ், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து கடந்த மே 18-ம் தேதி தீர்ப்பளித்தது.
இதேபோல தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் 6 பேரின் நன்னடத்தை தொடர்பான பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன், இதில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு தமிழக அரசு கட்டுப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்படுகிறார்கள்” என்று தீர்ப்பளித்தது.
மேலும், ‘‘பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு இந்த 6 பேருக்கும் பொருந்தும். சிறையில் 6 பேரின் நன்னடத்தை, அங்கு பயின்ற கல்வி, பரோல் விதிமுறைகள், மருத்துவ ஆவணங்கள், ஆளுநர் ஏற்படுத்திய தாமதம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த தீர்ப்பை வழங்குகிறோம்” என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
இன்று விடுவிப்பு: கடந்த 10 மாதங்களாக பரோலில் உள்ள நளினி, இன்று வேலூர் சிறைக்குத் திரும்பி, விடுதலைக்கான ஆணையுடன் வெளியே வரவுள்ளார்.
முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையிலும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் புழல் சிறையிலும் உள்ளனர். ரவிச்சந்திரன் பரோலில் உள்ளார். சிறைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நீதிமன்ற உத்தரவின் நகல் இன்று எங்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதையடுத்து, சிறையில் உள்ள 4 பேர் மற்றும் பரோலில் உள்ளவர்கள் இன்று முறைப்படி விடுவிக்கப்பட உள்ளனர்” என்றனர். இந்நிலையில், முருகன் மீதான நீதிமன்ற வழக்கால் இன்று வெளியே வருவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.