ராஜீவ் படுகொலை முதல்.. 6 பேர் விடுதலை வரை.. – விரைவு பார்வை

> கடந்த 1991-ல் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில், காங்கிரஸுடன் இணைந்து பயணிக்க அதிமுக முடிவெடுத்த தருணம். 1991 மே 21-ம் தேதி மாலை தேர்தல் பிரச்சாரத்துக்காக விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வந்தார் ராஜீவ் காந்தி.

> இரவு 8.30 மணி. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வாழப்பாடி ராமமூர்த்தி, மரகதம் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகளுடன் புறப்பட்ட ராஜீவ், வழியில் போரூர், பூந்தமல்லியில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார். இரவு 10 மணி. ஸ்ரீபெரும்புதூர் சென்றார். அங்கு தாய் இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பொதுக்கூட்ட மேடை நோக்கி சென்றார்.

> இரவு 10.20 மணி. மேடை அருகில் ராஜீவ் வந்தபோது, மகிளா காங்கிரஸின் லதா கண்ணன் மற்றும் அவரது மகள் கோகிலா ஆகியோர் அவரை சந்தித்தனர். அப்போது, கோகிலா வாசித்த கவிதையை கேட்டார். தொடர்ந்து, அருகில் மாலையுடன் நின்றிருந்த பெண் ஒருவர், ராஜீவ் கழுத்தில் மாலையை அணிவித்துவிட்டு, கீழே குனிந்து காலை தொட்டார். அப்போது பயங்கர வெடிச்சத்தம்.

> இரவு 10.25 மணி. ராஜீவ் காந்தி, லதா கண்ணன், கோகிலா, மாலை அணிவித்த பெண்ணான தனு, மாவட்ட எஸ்.பி. முகமது இக்பால், ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட காவலர்கள் என 17 பேரின் உடல்கள் ரத்த வெள்ளத்தின் நடுவே கிடந்தன. ராஜீவ் உடல் அவர் அணிந்த ஷூ மூலம் கண்டறியப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மறுநாள் உடல் டெல்லிக்கு அனுப்பப்பட்டது.

> மே 22. ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மாநில அரசின் சிபிசிஐடியில் குழு அமைத்து விசாரணை தொடங்கியது.

> மே 24. சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது. டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணையை தொடங்கியது. அன்றே, சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

> மே 29. கொலையாளி என சந்தேகப்பட்ட பெண் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

> சிபிஐ தொடர் விசாரணை காரணமாக, சென்னையில் தங்கியிருந்த நளினியின் தாயார் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோர் இந்த வழக்கில் முதன்முதலில் ஜூன் 11-ல் கைது செய்யப்பட்டனர். ஜூன் 14-ல் நளினி, முருகன் இருவரும் சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்திலும், அடுத்தடுத்து ராபர்ட் பயஸ், பேரறிவாளன், ஜெயக்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

> ஜூலை 27. விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த விக்கி, ரகு ஆகியோர் கோவையில் கைதாகினர். மறுநாள் அதே அமைப்பை சேர்ந்த டிக்சன், குணா ஆகியோர் சயனைடு தின்று உயிரிழந்தனர்.

> ஆகஸ்ட் 17. கர்நாடகாவின் முதாடி, பிரூடா பகுதிகளில் காவல் துறை சுற்றிவளைத்ததை அறிந்த புலிகள் இயக்கத்தை சேர்ந்த 17 பேர் சயனைடு அருந்த, அதில் 12 பேர் உயிரிழந்தனர். 5 பேர் பிடிபட்டனர்.

> ஆகஸ்ட் 19. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், பெங்களூரு புறநகரில் ஒரு வீட்டை சிபிஐ அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். அங்கு தங்கியிருந்த சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், அம்மன் உள்ளிட்டோர் விஷம் அருந்தினர்.

> 1992 மே 20. சென்னை தடா நீதிமன்றத்தில் 55 பக்க குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல்செய்தது. அதில் பிரபாகரன், பொட்டு அம்மன், அகிலா ஆகியோர் தலைமைறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டடனர். சிறையில் இருந்த 26 பேர், உயிரிழந்த 12 பேர் உட்பட 41 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

> 1998 ஜனவரி 28. சிறையில் இருந்த 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

> 1999 மே 5. தீர்ப்பில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தடா சட்டப்படி குற்றம்சாட்டப்பட்ட சண்முக வடிவேலு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். மற்றவர்கள் சிறையில் இருந்த காலத்தையே தண்டனைக் காலமாகக் கருதி விடுவிக்கப்பட்டனர்.

> 1999 அக்.10. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் தமிழக ஆளுநர் பாத்திமா பீவிக்கு கருணை மனு அனுப்பினர். அக்.29-ல் அந்த மனுக்களை ஆளுநர் தள்ளுபடி செய்தார். ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக கூறி 4 பேரும் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

> 2000 ஏப்ரல் 19. முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை எடுத்த முடிவின்படி, நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 3 பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர்.

> 2007-ல் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இருந்தபோது, கருணை மனு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகு, 2011-ல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

> 2011 ஆகஸ்டில் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, 3 பேரையும் தூக்கிலிட தடை விதிக்கப்பட்டது. வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

> 2014 பிப்ரவரி 18. கருணை மனுக்கள் நிலுவையை காரணம் காட்டி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

> பிப். 19. தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி, குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுவிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றது. மறுநாள் வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

> 2015 டிசம்பர் 2. மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் 7 பேரையும் விடுவிக்க முடியாது என்று கூறிய இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, 161-வது பிரிவின் கீழ் மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் விடுவிக்கலாம் என தீர்ப்பளித்தது.

> 2016 மார்ச் 2. தமிழக அரசு, 7 பேரையும் விடுவிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

> 2018 செப் 6. ஆளுநர் 161-வது பிரிவின் கீழ் 7 பேர் விடுதலையில் முடிவு எடுக்கலாம் என ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

> 2018 செப்.9. சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.

> 2021 மே 20. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், அமைச்சரவை தீர்மானத்தின்படி 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிடுமாறு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.

> 2022 மே 18. மாநில அரசின் பரிந்துரை மீது ஆளுநர் காலம் தாழ்த்தியதாக கூறி, ஆயுள் தண்டனையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

> 2022 நவம்பர் 11. பேரறிவாளன் விடுதலை அடிப்படையில் விடுதலை கோரிய நளினி, ரவிச்சந்திரன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்கள் இருவரை மட்டுமின்றி, சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ், முருகன், சாந்தன், ஜெயக்குமார் என 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதன்மூலம் அவர்களது 30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.