ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு; குடும்ப அட்டைதாரர்கள் செம ஹேப்பி!

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறவும் இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் பயன்படுகின்றன.

மேலும், இருப்பிட சான்றுக்கான முக்கிய ஆவணமாகவும் ரேஷன் கார்டு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது அரசு அறிவிக்கும் ஊக்கத்தொகை, வெள்ள நிவாரணம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் உதவித்தொகைகளும் ரேஷன் அட்டையை அடிப்படையாக கொண்டே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறாக தமிழகம் முழுவதும் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் ரேஷனில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களை மட்டுமே நம்பி உள்ள நிலையில் அவற்றில் புழு, பூச்சிகள் என கிடப்பது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.

தமிழகத்தில் எந்த கட்சி மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் ரேஷன் பொருட்களில் மட்டும் எந்தவிதமான மாற்றமும் வருவது இல்லை என்பதுதான் பொதுமக்களின் பிரதான குற்றச்சாட்டாகவும் இருந்து வருகிறது.

இந்த சூழலில் தான் இந்தியாவில் ஒரே நாடு.. ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.

ஒருவேளை முகவரி மாறி வேறு இடத்துக்குச் சென்றாலும் கார்டில் முகவரி மாற்றம் செய்யாமல் புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், பெரும்பாலான ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்க மறுப்பதாகவும், மாதத்தின் கடைசி நாளில் மட்டும் பொருட்கள் வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து கூட்டுறவு துறைக்கு புகார்கள் வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் குறித்து கண்காணிக்கவும், பொருட்கள் தடையில்லாமல் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் கூட்டுறவு துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல், ரேஷன் பொருட்களை வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.