மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெறும் சுருக்கெழுத்தர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை, நான்கு நாட்களுக்கு முன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தென் மண்டல இயக்குநர் நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசின் தென் மண்டல பணியாளர் தேர்வாணையத்தின் சுருக்கெழுத்தர் ‘சி’ மற்றும் ‘டி’ நிலை பணிக்கான தேர்வு வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்க உள்ளது. தென் மண்டலத்தில் 35 ஆயிரத்து 557 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு நடைபெறும் தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்பிருந்தும், தேர்வு எழுதுவோர் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் இருந்தும், தங்கள் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்துள்ளலாம்.
தேர்வு அறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வரக் கூடாது. அந்த பொருட்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படுவதுடன், குற்றவியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களை, 044 – 2825 1139 என்ற தொலைபேசி எண்ணிலும், 94451 95946 என்ற செல்போன் எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.