திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்கெட் அருகே ஜெயில் பேட்டை ரோட்டில் ரங்கராஜ் என்பவர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான இந்தக் கடையை ரங்கராஜ் ராஜா என்பவருக்கு உள் வாடகைக்கு விடுவதாக ரூ. 1 லட்சம் பெற்றுள்ளார்.
இதேபோல், ரங்கராஜனின் சகோதரர்கள் அவருக்கு தெரியாமல் ராஜாவிடம் மேலும் 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ரங்கராஜ் கடையை காலி செய்ய வேண்டும் என்று தெரிவித்த பொழுது ராஜா தான் செலுத்திய முழு தொகையும் கேட்டுள்ளார். அதற்கு ரங்கராஜ் தான் ஒரு லட்சம் மட்டுமே தருவதாக கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் ஆத்திரமடைந்த ரங்கராஜ், ராஜாவை கத்தியால் குத்தியது மட்டுமல்லாமல், ராஜாவை பெட்ரோல் எடுத்து ஊற்றி தீ வைக்கவும் முயன்றார்.
அப்பொழுது அருகிலிருந்த ஒருவர் ரங்கராஜை தடுத்து அவரது சட்டையைப் பிடித்து பின்பக்கமாக இழுத்துள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக ரங்கராஜ் உடலில் பெட்ரோல் ஊற்றியதோடு அவரது கையில் இருந்த லைட்டரும் அழுத்தி பற்றிக் கொண்டதனால் அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இதில் ரங்கராஜ் சாலையில் அங்கும் இங்குமாக ஓடினார். இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியில் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.