வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி விடுதியில் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு காவல் நிலைய ஜாமீனில், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். வேலூர் பாகாயத்தில் உள்ள சிஎம்சி மருத்துவக் கல்லூரி விடுதியில் படித்து வரும் ஜூனியர் மருத்துவ மாணவர்களை, சீனியர்கள் மாணவர்கள் ராகிங் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. ராகிங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் குறித்த புகாரை, புது தில்லியில் உள்ள ராகிங் தடுப்பு குழுவுக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் பெயர் வெளியிடாத மாணவர்கள் அனுப்பி வைத்தனர். புகாருக்கு உள்ளான சீனியர் மாணவர்கள் 7 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இந்த புகார் தொடர்பாக சிஎம்சி மருத்துவக் கல்லூரி ராகிங் தடுப்புகுழு நடத்திய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பாகாயம் காவல்நிலையத்தில் கல்லூரி முதல்வர் சாலமன் சதீஷ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், சீனியர் மருத்துவ மாணவர்களான காந்த், அன்பு சாலமன் டினோ, பஹதூர் சிங், டக்கா ஸ்டாலின் பாபு, ஜனார்த்தனன் அழகர்சாமி, கிருஷ்ண சைத்தன்யா ரெட்டி, முனிராஜூலு எனோஷ் அபிஷேக் உள்ளிட்ட 7 பேர் மீது தமிழ்நாடு ராகிங் தடுப்புச் சட்டம் 1997 மற்றும் இந்திய தண்டனை சட்டம் 341 (முறையற்ற வகையில் தடுத்து நிறுத்துதல்) உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ரஜினிகாந்த் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ராகிங் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 7 மருத்துவ மாணவர்களையும் ஆய்வாளர் ரஜினிகாந்த் நேற்று கைதுசெய்தார். பின்னர், விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தேவைப்படும்போது விசாரணைக்கு வரவேண்டும் என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளனர். விரைவில் ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவர்களை அழைத்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.