சென்னை: “10% இடஒதுக்கீடு விவகாரம் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக கலந்துகொள்ளவில்லை. அதற்கு காரணம் அக்கட்சியில் நிலவும் உள்கட்சி பிரச்சினையா, அல்லது கொள்கையிலேயே அவர்களுக்கு பாஜகவுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணமா என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு தீர்ப்பு வழங்கப்பட்ட விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக பங்கேற்கவில்லை. அதிமுக பங்கேற்காததன் பின்னணியில் பாஜக இருப்பதாக திமுக சாடியுள்ளது.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “10% இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்திருப்பதை எப்படி சந்திக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக சட்டமன்றத்தில் இருக்கிற கட்சிகளை எல்லாம் அழைத்து இன்று கலந்துரையாடல் கூட்டத்தை முதல்வர் நடத்தினார்.
திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, தவாக, விசிக, மமக, கொமதேக உள்ளிட்ட 10 கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன. இந்த அனைத்து கட்சிகளுமே சமூக நீதிக்கு எதிர்ப்பான இந்தப் பொருளாதார அடிப்படை என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற 10% இடஒதுக்கீட்டை ஆதரித்து உச்ச நீதிமன்றம் அளித்திருக்கின்ற தீர்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தை மீண்டும் அணுக வேண்டும் என்ற அடிப்படையிலான கருத்துகளை சொல்லியிருக்கின்றனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர். மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழக அரசும் அதற்கு உறுதுணையாக இருக்கும். சட்டத் துறை வல்லுநர்களுடன் ஆலோசித்து தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக கலந்துகொள்ளவில்லை. சமூ கநீதி கொள்கையில் தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவருக்குமே ஒருமித்த கருத்து இருந்தது. சமூக நீதியை அதிகரித்து, இடஒதுக்கீட்டை அதிகரித்தும் முதன்முதலில் சட்டம் கொண்டுவந்தவர் தலைவர் கருணாநிதி. அவரைப் பின்பற்றி எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்ததில் அவர்களுக்கும் பங்குண்டு. ஆகவே, திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் சமூக நீதிக் கொள்கையை எப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சிகளாகத்தான் இரண்டு கட்சிகளுமே இருந்திருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரும்போது 8.1.2019-ல் அன்று அதிமுக மக்களவை உறுப்பினராக இருந்த தம்பித்துரை அதை எதிர்த்துப் பேசி வெளிநடப்பு செய்தார். மாநிலங்களவையில் நவநீதிகிருஷ்ணனும் எதிர்த்துப் பேசி வெளிநடப்பு செய்தார். அவ்வாறெல்லாம் வெளிநடப்பு செய்து, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் கருணாநிதியுடைய சமூக நீதிக் கொள்கையைப் பின்பற்றிய அதிமுகதான் இன்று இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்கு காரணம் அதிமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்சினையா அல்லது அவர்களது கொள்கையிலேயே அவர்களுக்கு பாஜகவுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணமா என்று எங்களுக்கு தெரியவில்லை.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத இரு கட்சிகள் அதிமுகவும் பாஜகவுன்தான். இந்தக் கூட்டத்தில் அதிமுகவும் கலந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் கலந்துகொள்ளாதது எங்களுக்கு வருத்தம் அளித்தாலும்கூட, அவர்கள் இதை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அவர்களும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்வார்கள். தமிழக மக்களில் 90 சதவீதம் பேர் இந்த சமூகநீதி கொள்கையின் கீழ் வருபவர்கள்தான். ஆனால், ஒரு 10 சதவீதம் பேருக்காக அதிமுக இன்று சென்றுகொண்டிருப்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். ஆகவே, பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படுவது என்பதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்று அவர் கூறினார்.