கோயம்புத்தூர்: 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார். அப்போது அவர், “தமிழகம் முழுவதும் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் இதுவரை 67 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 7 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளோம்.
தற்போது பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் வரும் 27-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் சுமார் 20,000 படித்த இளைஞர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் சென்னை புதுக்கல்லூரியில் நடத்தப்பட்ட மெகா வேலைவாய்ப்பு முகாமில் தமிழக முதல்வர் பங்கேற்று ஒரு லட்சமாவது நபருக்கு வேலைவாய்ப்பு ஆணையினை வழங்கினார். தமிழகம் முழுவதும் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் தமிழகத்தில் வேலை இல்லை என்ற சொல்லைப் போக வேண்டும் என்று முதல்வர் சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை கொண்டு வந்து படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுத்தி வருகிறார். தமிழக முதல்வர் வெளிநாடுகளுக்குச் சென்று ஆயிரக்கணக்கான கோடி முதலீடுகளை கொண்டு வந்து பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி அதன் மூலம் ஒருபுறம் வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலமாக ஒருபுறம் வேலைவாய்ப்பினை உருவாக்கப்படுகிறது. வரும் ஐந்தாண்டுகளில் நிச்சயமாக தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் அடிப்படையில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவோம் என்பது எங்கள் துறையின் இலக்காகும்.
தற்போதைய காலம் தமிழகத்தின் பொற்காலமாக உள்ளது. நாட்டிலேயே தமிழக முதல்வர் தான் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். நடப்பாண்டு மட்டும் 11 தொழிற்பயிற்சி நிலையங்களை முதல்வர் உருவாக்கித் தந்துள்ளார். இத்துறைக்கு நடப்பாண்டு மட்டும் ரூ.2,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகளவில் தரம் வாய்ந்த தொழில் பயிற்சி நிலையங்களை உருவாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் எடுத்து வருகிறார்” இவ்வாறு அவர் கூறினார்.