வேலூர்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்த நிலையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பேரறிவாளன் கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து நளினி உள்பட மற்றவர்களும் தங்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து இருந்தனர். நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்பு நேற்று விசாரணை நடந்து வந்தது. இதன் முடிவில், நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினம் ஆகியோர் அதிரடியாக உத்தரவிட்டனர். தொடர்ந்து, பரோலை ரத்து செய்யக்கோரி வேலூர் மத்திய சிறை நிர்வாகத்திடம் நளினி கடிதம் அளித்தார்.
6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து சிறை நிர்வாகத்திடம் நளினி கடிதம் அளித்தார். சிறை நடைமுறைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து நளினி விடுதலையானார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு சிறையில் இருந்து நளினி விடுவிக்கப்பட்டார். 31 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு நளினி விடுவிக்கப்பட்டுள்ளார். வேலூர் மத்திய சிறையில் இருந்து முருகன், சாந்தன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். முருகனும், சாந்தனும் திருச்சி இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு அழைத்து செல்கின்றனர்.