Doctor Vikatan: என் சகோதரி ஐவிஎஃப் சிகிச்சை எடுத்து தற்போது 16 வார கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு இரண்டாவது மாதம் தொடங்கி, இப்போதுவரை திட்டுத்திட்டாக ப்ளீடிங் இருப்பதாகச் சொல்கிறார். ஸ்கேன் ரிப்போர்ட்டில் பிரச்னையில்லை என வந்துவிட்டது. ஆனாலும் இதற்கு என்ன காரணமாக இருக்கும்? குழந்தை நன்றாக இருப்பதாக மருத்துவர் சொல்கிறார். ஆனாலும் கவலையாக இருக்கிறது. தங்கள் ஆலோசனை தேவை.
– Nandakumar, விகடன் இணையத்திலிருந்து…
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
முதல் ட்ரைமெஸ்டர் எனப்படும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு நார்மலானது. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்தப்போக்கில் 25- 30 சதவிகிதம் இந்த மாதங்களில்தான் அதிகம். முதல் ட்ரைமெஸ்டரில் ஏற்படும் ப்ளீடிங்குக்கு பல காரணங்கள் இருக்கலாம். ‘எக்டோபிக் பிரெக்னன்சி’ என்று சொல்லப்படும் கருக்குழாய் கர்ப்பம், முத்துப் பிள்ளை என்ற நிலை, கருச்சிதைவுக்கான அறிகுறி என இதற்கு எதுவும் காரணமாக இருக்கலாம்.
உங்கள் சகோதரி விஷயத்தில், அவர் முதல் ட்ரைமெஸ்டரை கடந்து வந்துவிட்டார். ஸ்கேன் செய்ததில் மருத்துவர் நார்மல் என்று சொன்னதால் மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் இருக்க வாய்ப்பில்லை என்பதும் உறுதியாகியிருக்கும்.
16 வார கர்ப்பத்தில் ப்ளீடிங் ஏற்பட, பயப்படத் தேவையில்லாத காரணங்கள் என்னவென்று பார்க்கலாம். செர்விக்ஸ் எனப்படும் கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் நிறைய ரத்த நாளங்கள் இருக்கும். கர்ப்பமாக இருக்கும்போது இவை சற்று வீங்கலாம். அதன் காரணமாக லேசான ரத்தப்போக்கு இருக்கலாம். அது பயப்பட வேண்டிய விஷயமல்ல.
சிலருக்கு கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் இருக்கலாம். அதனாலும் ப்ளீடிங் இருக்கலாம். கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளும்போது செர்விக்ஸ் பகுதி பாதிக்கப்படுவதன் விளைவாகவும் ப்ளீடிங் இருக்கலாம்.
இரண்டாவது ட்ரைமெஸ்டரில் நஞ்சுக்கொடி கீழே இறங்கியிருக்கிறதா, அதன் காரணமாக ப்ளீடிங் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதாவது கர்ப்பப்பை வாய்ப்பகுதியின் மேல் நஞ்சுக்கொடி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதை ஸ்கேன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இது சற்றே ஆபத்தான நிலைதான். நஞ்சு கீழேயே இருப்பது மூன்றாவது ட்ரைமெஸ்டரிலும் தொடர்ந்தால் ரத்தப்போக்கு அதிகரிக்கலாம்.
அடுத்த நிலை நஞ்சு பிரிதல். உயர் ரத்த அழுத்தம், அடிபடுதல் காரணமாக சிலருக்கு நஞ்சு பிரியலாம். இதன் விளைவாக ப்ளீடிங்கும், கூடவே கடுமையான வலியும் இருக்கும். இதுவும் ஆபத்தான விஷயம் என்பதால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
உங்கள் விஷயத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து திட்டுத்திட்டாக ப்ளீடிங் இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதற்கு கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பே காரணமாக இருக்கக்கூடும். அதை நீங்கள் ஸ்கேன் மூலம் உறுதிசெய்துள்ளீர்களா என்பது முக்கியம்.
சிலருக்கு கர்ப்பப்பை வாய்ப்பகுதியானது சிறுத்துக் கொண்டே போகலாம். அதன் காரணமாக குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகள் இருக்கலாம். வழக்கமாக 5 மாதங்களுக்குள் ஏற்படும் இத்தகைய வலியை அபார்ஷன் என்பதாகவே அணுகுவோம். இந்நிலையில் கர்ப்பப்பைவாய்ப் பகுதியின் நீளத்தை மருத்துவரின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நீளம் சாதாரணமாக இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஒருவேளை கர்ப்பப்பை வாய்ப்பகுதியானது பலவீனமாக இருந்தால் முதுகுவலி, லேசான ரத்தப்போக்கு, ஏதோ ஓர் அழுத்தம் போன்ற உணர்வுகள் இருக்கலாம். மருத்துவரை அணுகும்போது கர்ப்பப்பை வாய்ப்பகுதியானது சிறியதாக இருப்பதையும், முன்கூட்டியே பிரசவம் நிகழலாம் என்பதையும் சொல்வார்.
ஐவிஎஃப் முறையில் உண்டான கர்ப்பம் என்பதால் உங்கள் சகோதரி ரெகுலர் செக்கப்புக்கு போயிருப்பார். 8 வாரங்களில் உங்களுக்கு ஸ்கேன் செய்யப்பட்டிருக்கும். எனவே பெரிய பிரச்னைகள் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை உங்களுக்கு திடீரென ப்ளீடிங் அதிகரிக்கிறது, வலியும் இருக்கிறது கட்டிக்கட்டியாக ரத்தம் வெளியேறுகிறது, தலைச்சுற்றல், மயக்கம் இருக்கிறது, உங்களுக்கு நஞ்சு கீழே இருப்பதாக மருத்துவர் சொல்லியிருக்கும் நிலை போன்ற கண்டிஷன்களில் மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம். அதுவே லேசான ரத்தப்போக்கு, ஸ்கேனிலும் பிரச்னையில்லை குழந்தையின் வளர்ச்சி நார்மலாக இருக்கும் நிலையில் பயப்படத் தேவையில்லை.
மருத்துவர் குறிப்பிடும் தேதிகளில் மட்டும் செக்கப்புக்கு போகாமல், உங்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெறுவது சிறந்தது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.