புதுடெல்லி: இந்தியா, இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்த 4 மாதத்தில் இறுதி செய்ய புதிய பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து இடையேயான வர்த்தகத்தை அடுத்த 2030ம் ஆண்டுக்குள் இரு மடங்குகாக உயர்த்துவதை நோக்கமாக கொண்டது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ). இந்த ஒப்பந்தத்தை கடந்த அக்டோபருக்குள் இறுதி செய்ய முந்தைய இங்கிலாந்து அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.
இதற்காக இந்திய, இங்கிலாந்து அதிகாரிகள் மட்டத்திலான பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், தரவுகளை உள்ளூர் மயமாக்குதல், இங்கிலாந்து நிறுவனங்களை ஒன்றிய அரசின் ஒப்பந்தங்களை ஏலம் எடுக்க அனுமதிப்பது ஆகியவற்றில் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், அக்டோபரில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், இங்கிலாந்தில் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பதவியேற்றுள்ளார். அவரது அரசு, தடையற்ற ஒப்பந்த வர்த்தகத்தை அடுத்த 4 மாதத்தில் முடிக்க புதிய இலக்கை தற்போது நிர்ணயித்துள்ளது.
இதற்காக பேச்சுவார்த்தை நடத்த அடுத்த மாதம் இங்கிலாந்து அதிகாரிகள் இந்தியா வர உள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் 26 அம்சங்களில் 14க்கு இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. எஞ்சிய விஷயங்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சம் அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.