பிரதமர் மோடி நேற்று முன் தினமும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றும் தமிழ்நாடு வந்தனர். இதுகுறித்து அண்ணாமலை கூறுகையில், “அமித்ஷா தலைமையில் நடைபெற்ற மாநில பாஜக ஆலோசனை கூட்டத்தில் முழுக்க முழுக்க கட்சியின் வளர்ச்சி குறித்து பேசப்பட்டது. தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? இன்னும் என்ன செய்ய வேண்டும்? நான் பிரதமரிடம் ஏதாவது கொண்டு செல்ல வேண்டுமா? என்று அவர் கேட்டறிந்தார். மாநில தலைவர் என்ற முறையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியுடன் காரில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது, அவரும் தமிழக மக்களுக்கு நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டறிந்தார்.
தமிழக மக்கள் மீது பாஜக தலைவர்கள் மிகுந்த பாசமும், நம்பிக்கையும் வைத்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் கருத்துகளுக்காக பாஜகவினர் மீது எப்படிப்பட்ட பொய் வழக்குகளை பதிவு செய்கின்றனர் என்று எங்கள் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவர் நிர்மல்குமார் மற்றும் மாநில துணை தலைவர் பால்கனகராஜ் ஆகியோர் ஒரு பட்டியலை அமித்ஷாவிடம் அளித்தனர். இதனை கவனித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று அமித்ஷா உறுதியளித்தார். கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்தும் பாஜக. மூத்த நிர்வாகிகளிடம் அமித்ஷா கேட்டறிந்தார்” என்றார்.
முன்னதாக, பிரதமர் மோடி நேற்று முன் தினம் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு வந்தார். அப்போது இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். விழாவை முடித்துவிட்டு திரும்பும்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியின் காரில் பயணித்தார். இந்தச் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பிரதமர் மோடியைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இந்தியா சிமெண்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்னை வந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு பாஜக தலைமை அலுவலகம் சென்ற அவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் உரையாடினார். அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அவரது செயல்பாடு மோடிக்கும், அமித் ஷாவுக்கு திருப்தி அளித்ததால் டெல்லியின் குட் புக்கில் அண்ணாமலை இருக்கிறார் என கூறப்படுகிறது.