அமுதை பொழியும் 'இசையரசி' பி.சுசீலாவின் 87வது பிறந்த நாள்

தேனில் பாலையும் சர்க்கரையையும் கலந்தால் எவ்வளவு தித்திப்பாக இருக்குமோ, அவ்வளவு தித்திப்பானது பாடகி பி.சுசீலாவின் குரல். தென்னிந்தியாவின் இசைக்குயில் இவர். அரை நுாற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்திய சினிமா இசையில் ஆதிகம் செலுத்திய பெண் குரல் இவருடையது. இசைத்துறையில் 60 ஆண்டுகளாக கடந்து நிற்கும் இந்த குயிலுக்கு இன்று 87வது பிறந்தநாள்.

ஆந்திர பிரதேசம், விஜயநகரத்தில் 1935ம் ஆண்டு நவ., 13ம் தேதி பிறந்த பாடும் வானம்பாடியான பி.சுசீலா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் என 9 மொழிகளில் சுமார் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். 17,695 பாடல்களை தனியாக பாடியதற்காக சுசீலாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

தேசிய அளவில், மிகச்சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை, ஐந்து முறை பெற்றவர். பத்மபூஷண், கலைமாமணி, மற்ற மாநில விருதுகள் உள்ளிட்ட விருதுகளும் வாங்கியுள்ளார். ஹிந்தி திரை உகின் புகழ் உச்சியில் மின்னிய லதா மங்கேஷ்கர், ஷம்ஷாத் பேகம், ஆஷா போஷ்லே உட்பட பலரால் பாராட்டப்பட்டவர் இவர். இந்தியாவின் மிகப் பெரிய இசை மேதை நௌஷாத் அலி, “அக்பர்” படத்தில் (இந்தியில் “மொகலே – ஆசம்” திரைப்படம்) அவர் பாடிய பாடலைக் கண்டு வெகுவாகப் பாராட்டியது பல பத்திரிகைகளில் வெளியாகி அவருக்கு புகழ் சேர்த்தது.

ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஏ.எம்.ராஜா, சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட இந்தியாவின் அனைத்து புகழ் பெற்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இவர், பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ.எல்.ராகவன், ஏ.எம்.ராஜா, கண்டசாலா, ஜேசுதாஸ், எஸ்.பி.பி என அனைத்து பிரபலங்களுடன் இணைந்து பாடல்களைப் பாடியுள்ளார் சுசீலா. இசை அரசர் டி.எம்.சவுந்தர்ராஜன் உடன் அதிக பாடல்கள் பாடியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.