புதுடெல்லி: டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசின் ஊழல்களை துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அடுத்தடுத்து அம்பலப்படுத்தி வருகிறார்.
காரக்பூர் ஐஐடியில் படித்து ஐஆர்எஸ் அதிகாரியாக பணியாற்றிய அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 1999-ல் லஞ்சத்துக்கு எதிரான போராட்டத்தை தொடங்கினார். 2006-ம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார்.
பின்னர் 2011-ம் ஆண்டில் லோக்பால் சட்டத்தை அமல்படுத்தக் கோரி காந்தியவாதி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற கேஜ்ரிவால் தேசிய அளவில் பிரபலமடைந்தார். கடந்த 2012-ம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார். கடந்த 2013 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய அந்த கட்சி 28 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. டெல்லி முதல்வராக பதவியேற்ற கேஜ்ரிவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 49 நாட்களில் ராஜினாமா செய்தார். இதன்பிறகு 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கேஜ்ரிவால் மீண்டும் முதல்வரானார். 2020 தேர்தலிலும் ஆம் ஆத்மியே ஆட்சியை கைப்பற்றியது.
முதல்முறையாக முதல்வராக பதவியேற்றபோது ‘துணை நிலை ஆளுநராக இருந்த நஜீப் ஜங் தொடங்கி இப்போதுவரை அனைத்து துணை நிலை ஆளுநர்களுடன் கேஜ்ரிவால் மல்லுக்கட்டி வருகிறார். கடந்த மே மாதம் டெல்லியின் 22-வது துணைநிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா பதவியேற்றார்.
முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அப்பழுக்கற்ற கரங்களுக்கு சொந்தக்காரர் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் துதிபாடி வரும் நிலையில் ஆம் ஆத்மி அரசின் ஊழல் விவகாரங்களை துணை நிலை ஆளுநர் சக்சேனா ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார்.
அவர் பதவியேற்ற சில வாரங்களில் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஹவாலா பணப் பரிவர்த்தனையில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கரோனா பெருந்தொற்று காலத்தில் டெல்லியில் 7 தற்காலிக மருத்துவமனைகளை கட்டியதில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். டெல்லி இலவச மின்சார திட்டத்தில் இதுவரை நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தவும் சக்சேனா உத்தரவிட்டிருக்கிறார்.
அதோடு டெல்லி மதுபான உரிம முறைகேடு விவகாரத்தை ஆளுநர் தூசி தட்டி எடுத்தார். இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த அவர் பரிந்துரை செய்தார். இதன்பேரில் சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பல்வேறு உண்மைகளை ஆதாரங்களுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இவ்வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் பலர் சிக்கி உள்ளனர். இது தேசிய அளவில் அந்த கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் முதல்வர் கேஜ்ரிவால் குடும்பத்தினர் 3 சொத்துகளை விற்றனர். இந்த சொத்துகள் ரூ.72.72 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக பத்திரப் பதிவு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் ரூ.4.54 கோடிக்கு விற்கப்பட்டதாக லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊழலை அம்பலப்படுத்தியதிலும் சக்சேனாவுக்கு பங்கிருப்பதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தபடி புதிய ஊழல் குண்டை தூக்கி எறிந்துள்ளார். அதாவது ஆம் ஆத்மி கட்சிக்கு இதுவரை ரூ.50 கோடி அளித்திருப்பதாகவும் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மட்டும் ரூ.10 கோடி லஞ்சம் அளித்திருப்பதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக சுகேஷ் அனுப்பிய கடிதத்தை துணை நிலை ஆளுநர் மிக தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.
பூதாகர ஊழல்கள், காற்று மாசு, யமுனை நதியில் ரசாயன கழிவு கலப்பு, அரசின் தேவையற்ற விளம்பர செலவுஎன பல்வேறு விவகாரங்களில் துணைநிலை ஆளுநர் சக்சேனா நாள்தோறும் சாட்டையை சுழற்றி வருகிறார். அவரது அசுரவேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல்வர் கேஜ்ரிவாலும் அமைச்சர்களும் திணறி வருவதாகக் கூறப்படுகிறது. ஆளுநரை சந்திப்பதை கேஜ்ரிவால் முற்றிலுமாக தவிர்த்து வருகிறார். ஆளுநர் பங்கேற்கும் அரசு விழாக்கள் மற்றும் வாராந்திர ஆலோசனை கூட்டங்களை அவர் முற்றிலுமாக புறக்கணித்து வருகிறார்.
ஆளுநர் சக்சேனா இதற்கு முன்பு பல்வேறு தனியார் நிறுவனங்களில் மூத்த அதிகாரியாக பணியாற்றி உள்ளார். அதன்பிறகு சமூக ஆர்வலராக மாறிய அவர் ஊழலுக்கு எதிராகவும் ஏழைகள் நலனுக்காகவும் மிகத் தீவிரமாக பணியாற்றி வந்தார்.
‘‘பாம்பின் கால் பாம்பறியும்’’ என்ற பழமொழிக்கு ஏற்ப கேஜ்ரிவால், சக்சேனா ஆகிய இரு சமூக ஆர்வலர்களுக்கு இடையே தற்போது பனிப்போர் நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி அரசின் அனைத்து கோப்புகளையும் சக்சேனா பூதக்கண்ணாடியுடன் ஆராய்ந்து வருகிறார். அடுத்தடுத்த மாதங்களில் மேலும் பல்வேறு ஊழல் பூதங்கள் வெளிவரும் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உச்ச நீதிமன்றம் கண்டிப்பு: துணை நிலை ஆளுநருக்கு எதிராக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் புதிதாக 2 மனுக்களை சில நாட்களுக்கு முன்பு சிசோடியா தாக்கல் செய்தார். “டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா தன்னிச்சையாக அரசின் அதிகாரங்களை தனது கையில் எடுத்துள்ளார். அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும். டெல்லி அமைச்சரவை முக்கிய முடிவுகளை எடுக்கும் போது ஆளுநரின் ஆலோசனையை கேட்க வேண்டும் என்ற சட்ட விதியை ரத்து செய்ய வேண்டும்” என்று மனுக்களில் கோரப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது சிசோடியா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறும்போது, “ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும்” என்றார்.
இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, “அரசியல் விவகாரங்களை விசாரிக்க முடியாது. சட்டம் தொடர்பான விவகாரங்களை மட்டுமே விசாரிப்போம். ஆளுநரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடியாது. ஆம் ஆத்மி சார்பில் புதிதாக மனுக்களை தாக்கல் செய்யக் கூடாது. வழக்கு விவரங்களை ஊடகங்களுடன் பகிரக் கூடாது’’ என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார்.