புதுடெல்லி,
டி-20 உலகக் கோப்பை தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. கோப்பையை வெல்லும் என்று கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
இதனிடையே இந்திய அணியின் தோல்வியை கிண்டல் செய்யும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது டுவிட்டர் பதிவில், “எனவே, இந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டியில் 152/0 vs 170/0” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது போல், கடந்த 2021 டி-20 உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 152 சேர்த்து விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. இதனை குறிப்பிடும் விதமாகவே ஷெபாஸ் ஷெரீப் “152/0 vs 170/0” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் பதிவிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில், “இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் எங்களது நிலையில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் நீங்களோ மற்றவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியைத் தேடுகிறீர்கள். அதனால்தான் நீங்கள் உங்கள் நாட்டின் நலனில் கவனம் செலுத்துவதில்லை” என்று இர்பான் பதான் பதிவிட்டுள்ளார்.