தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது.
சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில், 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் மழைநீரால் சூழப்பட்டன. சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்ததால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சீர்காழி, செம்பனார்கோவில் பகுதிகளில் மட்டும் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 312க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியாகவும் 19க்கும் மேற்பட்டு வீடுகள் முழுமையாகவும் இடிந்து சேதமடைந்துள்ளன.
கனமழையால் சீர்காழி, பூம்புகார் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பூம்புகார், திருமுல்லைவாசல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகுகள் கடலில் மூழ்கின. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, அமைச்சர் மெய்ய நாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ள பாதிப்புகளை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் இணைந்து அமைச்சர் மெய்யநாதன் செய்து வருகிறார்.
இந்த நிலையில், மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்றிரவு சீர்காழி செல்லவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், எத்தகைய மழை வந்தாலும் சமாளிப்பதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி, அரசு துறைகள் கூட்டாக சேர்ந்து செய்து வருவதாக குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை பற்றி கவலை இல்லை. பொதுமக்களின் பாராட்டே போதும் என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இன்றிரவே சீர்காழி செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, சீர்காழி, மயிலாடுதுறை, கடலூரில் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார். மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, நிவாரணப்பணிகளையும் அவர் மேற்பார்வையிட உள்ளார்.