ஷிம்லா: இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 65.92 சதவீத வாக்குகள் பதிவாயின. இமாச்சல பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளதால் அங்குள்ள 68 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இங்கு 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக மொத்தம் 7,881 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தலையொட்டி இங்கு கடந்த சில வாரங்களாக தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பாஜகவின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல்வர் ஜெய்ராம் தாக்குர், அவரது மனைவி, 2 மகள்கள் மாண்டி மாவட்டத்தில் செராஜில் உள்ள வாக்குச் சாவடியில் நேற்று காலை வாக்களித்தனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55.65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகாரிகள் முன்னிலையில் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்படும். வாக்குப்பதிவின்போது 157 வாக்குச்சாவடி மையங்களை மகளிர் மட்டுமே நிர்வகித்து சாதனை புரிந்துள்ளனர். வாக்குப்பதிவின்போது 105 வயது மூதாட்டியான நரோ தேவி, சம்பா மாவட்டம் சுரா தொகுதியில் அமைக்கப்பட்ட லதான் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.