உலக அளவில் மழைநீர் வடிகால் திட்டங்களும், செயல்பாடுகளும் – ஒரு பார்வை!

காலநிலை மாற்றம் காரணமாக உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாகச் சுற்றுச்சூழலில் நிகழும் மாற்றங்கள் இந்தப் புவி எதிர்கொள்ளும் பிரச்னைகளில் மிக முக்கியமானதாப் பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாகக் குறிப்பிட்ட கால இடைவேளையுடன் பெய்ய வேண்டிய மழை, குறைந்த நேரத்தில் அதிகம் பெய்துவிடுவதால் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

நகரமயமாதல், காலநிலை மாறுபாடு, மக்கள்தொகை பெருக்கம் போன்ற காரணங்களுக்காக ஒவ்வொரு நகரத்திலும் சில கட்டமைப்புகளை மாற்ற வேண்டியிருக்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு நிலப்பரப்பிலும் உள்ள சட்டங்கள், சமூக அமைப்பு, மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளும் விதம், இப்படி ஒவ்வொரு திட்டங்களை அமல்படுத்துவதிலும் சிக்கல்கள் இருந்து வருகின்றன. இருப்பினும் பல நாடுகளும் வெள்ள பாதிப்புகளைக் கட்டுக்குள் கொண்டுவர வடிகால் அமைப்பைத் திறம்படச் செய்து வருகின்றன. அதில் வெற்றி அடைந்த முறைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்…

குடியிருப்புகளுக்குள் சூழ்ந்த வெள்ளம்

வெள்ளநீர் பாதிப்பிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான நமது திட்டங்கள் தொழில்நுட்பரீதியாக மட்டுமல்லாமல், இயற்கையைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

கால்வாய்கள் அமைப்பது:

உலகில் அடிக்கடி பேரிடர்களைச் சந்தித்து வருவதில் முக்கிய நாடு ஜப்பான். இங்கு வெள்ள பாதிப்புகளைக் கட்டுப்படுத்த பூமிக்கு அடியில் குழாய்கள் அமைக்கப்பட்டு மழை நீர் வெளியேற்றப்படுகிறது. குறிப்பாக, மக்கள்தொகை பெருக்கத்துடன் இருக்கும் ஜப்பானின் பெருநகரங்களில் இந்தத் திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணம் மக்கள் வாழ்வதற்கு போதிய இட வசதிகள் இல்லாததால், பூமிக்கு மேலே இந்தக் குழாய்கள் பதிப்பதற்குப் பதிலாகப் பூமிக்கு அடியில் இந்த குழாய்கள் அமைக்கப்பட்டு மழை நீர் தேங்காமல் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் கால்வாய்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இதை முற்றிலும் சீர்குலைப்பது இங்குள்ள குப்பைகள்தான். நம் நாட்டில் திடக்கழிவு மேலாண்மை சரியாக இல்லாததின் விளைவு, கால்வாயில் அடித்துச் செல்லப்படும் நீர் ஆற்றிலோ ஏரியிலோ கலப்பதை இந்தக் குப்பைகள் தடுத்துவிடுகின்றன. எனவே கால்வாய்கள் அமைப்பது சரியான தீர்வாக இங்கு அமையவில்லை என்கிறார்கள்.

மழைநீர் வடிகால்

மழைநீர் சேமிப்பு திட்டம்!

உலக அளவில் பல நாடுகள் மழைநீரை முறையாகச் சேமிக்கப் பல திட்டங்களைச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிரேசிலில் ஒரு மில்லியன் வீடுகளில் மழைநீர் சேமிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதேபோல், சீனாவிலும் ஒரு ஏக்கர் விவசாய நிலங்களில் இரண்டு மழைநீர் தொட்டிகள் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதனால் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பலனடைந்து வருகின்றனர்.

ஆனால் மேலே குறிப்பிட்ட இரண்டு அமைப்புகளுமே `வெள்ளம் ஏற்படாமல் இருக்க மழைநீர் வழிந்து ஓடுவதைக் குறைப்போம்’ என்ற பெயரில், மழை நீரை வெறுமனே ட்ரமிலோ, சிமென்ட் தொட்டியிலோ அடைப்பது சரியான தீர்வாகாது. இது மனிதனுக்கு நீர்ப் பற்றாக்குறையை ஏற்படுத்தாமல் இருப்பதற்கும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு திட்டம் அவ்வளவுதான். ஆனால், இந்தத் திட்டங்கள் மற்ற உயிர்களின் வாழ்வாதாரத்துக்கு ஆதாரமாக விளங்குமா? என்பதை யோசிக்க வேண்டும். அரசால் கொண்டுவரும் திட்டமானது ஒட்டுமொத்த உயிர்ச்சூழலையும் பாதுகாப்பது மிக அவசியம். அதனடிப்படையில் தான் சில நாடுகளில் பசுமைக் கூரைகள், மழைத் தோட்டங்கள், பசுமை அகழிகள், ஊடுருவக்கூடிய மேற்பரப்புகளைப் பூங்காக்கள் போன்ற இடங்களில் அமைக்கின்றனர்.

மழைநீர் சேமிப்பு அமைப்பு

உயிர்ச்சூழலைப் பாதுகாக்கத் திட்டம்!

இயற்கையாகவே மண்ணுக்கு நீரை உறிஞ்சும் தன்மை இருக்கும். ஆனால் சிறிய காலத்தில் அதிகமான மழை பொழியும்போது மண்ணால் அந்த நீரை ஒரே சமயத்தில் உறிஞ்சிக் கொள்ள முடியாது. மேலும் தற்போது இருக்கும் கட்டமைப்பின் மாற்றங்களால் மண் தரை என்பது இல்லாமல் சிமென்ட் தரைகளே அதிகம் உள்ளன. அப்படியே அது மண் தரையாக இருந்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் பிரச்னையால் மழைநீர் உள்ளே செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் செயற்கையாக நீரை ஸ்பாஞ்ச் உறிஞ்சிக் கொண்டு தன்னுள் வைத்திருப்பது போல, இயற்கை முறையில் நீரைச் சேமிப்பதற்கு ஏதேனும் திட்டம் நடைமுறையில் இருக்கிறதா என்றால்… ஆம்!தற்போது சீனாவில் இதுபோன்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

சீனா

இந்தியாவைவிட மக்கள்தொகை அதிகமுள்ள நாடு சீனா. அங்கு அடிக்கடி மழை பொழிவு, வெள்ள அபாயம் என்பது தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் நிகழ்வுதான். இதிலிருந்து மக்களைத் தற்காத்துக் கொள்ள சீனா ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. அதுதான் “ஸ்பாஞ்ச் சிட்டி”  திட்டம். அங்கு 2015-ம் ஆண்டு 16 நகரங்களில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் இலக்கு 2020-ம் ஆண்டுக்குள் 80% நகரங்களில் இந்தத் திட்டம் அமைக்கப்படுவதும், 70% மழை நீரைச் சேமித்துப் பயன்படுத்துவதும்தான். இது மழையால் ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது என்பதையும் தாண்டி, மழை நீரை உறிஞ்சி மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கும் உபயோகமாக இருக்கும் என்பதால் சீனா இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியது.

“ஸ்பாஞ்ச் சிட்டி” அமைப்பு

உறிஞ்சும் நகரங்கள் (ஸ்பாஞ்ச் சிட்டி) என்றால் என்ன?

பொதுவாக மழை வெள்ளத்தைக் கால்வாய்கள் ஏரிகள், டேம்கள் போன்ற கட்டமைப்புகளுக்குக் கொண்டு சேர்க்கும். ஆனால் ஸ்பாஞ்ச் திட்டம் என்பது இதற்கு நேர் எதிராக, மழை நீரால் ஏற்படும் வெள்ளத்தை ஓடவிட்டு ஒரு சில இடங்களில் அதைத் தேக்கி, பின்பு நேராக நீரை ஓட விடாமல் அதன் போக்கை மாற்றுவதன் மூலமாக வெள்ளை நீரின் வேகத்தைக் குறைத்து… பின்பு தேக்கி வைக்கும் நீர் பகுதிகளில் பூங்காக்கள் அமைப்பதன் மூலமாக விலங்குகளின் ஆதாரத்தைப் பெருக்குவதேயாகும்.

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, கொச்சி ஆகிய நகரங்கள் “ஸ்பாஞ்ச் சிட்டி”  திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், அதிக அளவில் நிதி தேவைப்படும் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி மாநில, மத்திய அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.  

சூழல்-சார் பசுமை

நாடு முழுவதிலும் மழை நீரைத் தேக்கி வைக்க, வெள்ளத்தைத் தடுக்க  திட்டங்கள் தீட்டப்பட்டு இருந்தாலும், இந்த ஸ்பாஞ்ச் திட்டம் எனப்படுவது உயிர்ச் சூழலைச் சமநிலையில் வைத்திருக்க பேருதவியாக இருக்கிறது. குறிப்பாக, இந்தத் திட்டம் இயற்கையாகவே அமைந்திருக்கும் ஏரிகள், குளங்கள், சதுப்புநிலங்கள் வாயிலாக வெள்ளத்தைத் தடுக்கும் ஒரு நடவடிக்கை எனலாம்.

ஆனால் இதை இந்திய நகரங்களில் நடைமுறைப்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. முக்கியமாக, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கான்கிரீட் கட்டடங்களை முடிந்த அளவு தவிர்த்துவிட்டு நீரை நிலத்தில் உறிஞ்சும் மேற்பரப்புகளை மாற்றி அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவைப்படுகின்றன. எனவே இவற்றையெல்லாம் மாற்றாமல் இந்தத் திட்டத்தைச் சாத்தியப்படுத்துவது கடினம். ஆகவே, இதை மத்திய மாநில அரசுகள் சட்டங்களாகவும் இயக்கமாகவும் உருவாக்கலின் மூலம் இதைச் சாத்தியப்படுத்த முடியும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.