சேலம்: சேலத்தில், நாட்டு கைத்துப்பாக்கிகள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர், உலகத் தமிழ் நீதிமன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி டாஸ்மாக் மதுக்கடைகள், குவாரிகள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் என்று என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த புளியம்பட்டியில், கடந்த மே 19 -ம் தேதி ஓமலூர் போலீஸார் மேற்கொண்ட வாகன சோதனையின்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களிடம் இருந்து, நாட்டு ரக கைத்துப்பாக்கிகள் 2, வெடிமருந்து, முகமூடி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த நவீன் சக்ரவர்த்தி (25), செவ்வாய்பேட்டை சஞ்சய் பிரகாஷ் (24) என்பதும், பொறியியல் பட்டதாரிகளான இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது பற்று கொண்டு, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
சேலம் செட்டிச்சாவடி பகுதியில், அவர்கள் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, கைத்துப்பாக்கிகளை தயாரித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்த சேலத்தைச் சேர்ந்த கபிலர் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். மூவர் மீதும் ஆயுதச் சட்டம், வெடிபொருட்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் என்ஐஏ-விடம் ( தேசிய புலனாய்வு முகமை) ஒப்படைக்கப்பட்டது. சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரையும், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் என்ஐஏ போலீஸார் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ், கபிலர் மூவர் மீதும் என்ஐஏ சார்பில் நேற்று முன்தினம் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், கைது செய்யப்பட்டுள்ள மூவரும் விடுதலைப் புலிகள் மீது பற்று கொண்டு, உலகத் தமிழ் நீதிமன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தனர்.
குறிப்பாக, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று, டாஸ்மாக் மதுக்கடைகள், குவாரிகள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதன்மூலம் மக்களுக்கு, ஆயுதப் போராட்டத்தில் தங்கள் இயக்கம் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று குற்றப்பத்திரிகையில் என்ஐஏ தெரிவித்துள்ளது.