சென்னை சைதாப்பேட்டையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகாலை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் அதனை அமைச்சர்கள் எ.வ. வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலு, “சைதாப்பேட்டை பஜார் சாலையில் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் எனவே இரவு நேரங்களில் இரண்டு நாட்களில் பஜார் சாலை முதல் ஜோன்ஸ் சாலைவரை உள்ள மழை நீர் வடிகால் பணிகளை முடிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம் . மழை நீர் பெரிய அளவில் எங்கும் தேங்கவில்லை இருப்பினும் சென்னை முழுவதும் ஆய்வு மேற்கொள்ள முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொடர்ந்து 20 நாட்களாக சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்கும் நோக்கில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தற்பொழுது அண்ணா சாலையில் ஒரு சொட்டுக்கூட தண்ணீர் தேங்கவில்லை. அதேபோல பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாலைகள் சீராக உள்ளன என்ற தகவல்கள் அதிகாரிகள் வாயிலாக கிடைத்திருக்கிறது. கடந்த ஆட்சியில் நிதி சுமையை ஏற்படுத்தி பணிகளை செய்தார்கள் . தற்பொழுது பணிகள் தொய்வு பெற்றிருக்கும் இடங்களை நாங்கள் கண்டறிந்து பணிகளை முடுக்கி விட்டிருக்கிறோம்.
கடந்த ஆட்சி காலத்தில் ஒரு ஒப்பந்ததாரருக்கு பல பணியை கொடுத்தார்கள். ஒவ்வொரு ஒப்பந்ததாரருக்கும் ஒரு பணியை மட்டுமே வழங்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். எனவே தற்பொழுது ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணியை மட்டுமே வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சில இடங்களில் சாலையில் ஏற்பட்டுள்ள குழிகளை அடைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுவரும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்த பின் அந்த சாலைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.