கவுதம் – மஞ்சிமா திருமணம் நவ.,28ம் தேதி நடக்கிறது
80களில் முன்னணி நடிகராக இருந்த கார்த்திக்கின் மகனான கவுதம், மணிரத்தனத்தின் கடல் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல தமிழ் படங்களிலும் நடித்தவர் மஞ்சிமா மோகன். இருவரும் தேவராட்டம் என்ற படத்தில் நடித்தபோது காதல் கொண்டனர்.
கடந்த 3 வருடமாக இருவரும் காதலித்து வந்தபோதும் அது சமீபத்தில்தான் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போன்று தங்கள் காதலை உறுதிப்படுத்தினர். காதலுக்கு இரு குடும்பத்தினரும் பச்சைகொடி காட்டிவிட்ட நிலையில் வருகிற 28ம் தேதி இருவருக்கும் சென்னையில் திருமணம் நடக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். அதன்பிறகு சென்னை மற்றும் கொச்சியில் நடக்கும் திருமண வரவேற்பு விழாவில் நண்பர்களும், திரையுலக பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். இதனை இரு குடும்பத்தினரும் முறைப்படி இன்னும் அறிவிக்கவில்லை.