காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் 214 ஏரிகள் நிரம்பியுள்ளன. ஏரிகளின் மதகுகள் உடையும் அபாய நிலையில் இருப்பதால், பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏரி கரையோரங்களில் மண் மூட்டை அடுக்கும் பணியும் நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அந்தவகையில், காஞ்சிபுரம், பெரும்புதூர் குன்றத்தூர், உத்திரமேரூர் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் அவதிப்பட்டனர். நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக சாலைகள் கிடக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாதா கோவில் தெரு, தாமல்வார் தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர், விளக்கடி பெருமாள் கோவில் தெரு போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவா கூட்டை தெரு, லிங்கப்பன் தெரு, முருகன் காலனி, பல்லவர் மேடு பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட மழையளவு (மிமீ): காஞ்சிபுரம் 40.40, பெரும்புதூர் 17.20, உத்திரமேரூர் 169, வாலாஜாபாத் 32.20, செம்பரம்பாக்கம் 61, குன்றத்தூர் 89.20 என பதிவாகியுள்ளது. தொடர் மழையால் உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம் ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கல், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல் சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி உள்ளிட்ட 64 சிறிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
காஞ்சிபுரம் பகுதியில் 381 ஏரிகள் உள்ளன. இதில், 36 ஏரிகள் 76 சதவீதமும், 150 ஏரிகள் 50 சதவீதமும், 147 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் பெரிய ஏரிகளான தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதுபோல் தென்னேரி, உத்திரமேரூர், பெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், மணிமங்கலம் உள்ளிட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும் மழைநீர் தேங்கிய பகுதிகளில் கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர், தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், மேடவாக்கம், நாவலூர், திருப்போருர், கேளம்பாக்கம், கோவளம், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், கருங்குழி, சித்தாமூர், லத்தூர், வேடந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து விடியவிடிய கன மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக உள்ள 528 ஏரிகளில் 150 பெரிய ஏரிகளும், ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 300 சிறிய ஏரிகளும் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. திம்மாவரம் நீஞ்சல் மடு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரி பாலாற்றில் திறக்கப்பட்டுள்ளது.
உபரி நீர் திறக்கப்பட்டதால் மகாலட்சுமி நகர் சேதம் ஏற்படாமல் தப்பியது. பெரிய ஏரிகளான மதுராந்தகம், பொன்விளைந்தகளத்தூர், கொளவாய், கொண்டங்கி, பாலூர், மானாம்பதி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, அணைக்கட்டு, செய்யூர், லத்தூர் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம், மேலமையூர், வல்லம், ராமகிருஷ்ணாநகர், பவானிநகர், நியூகாலனி ஆகிய பகுதிகளில் வீடுகளை சுற்றிலும் கடந்த 3 நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளது.
சிங்கபெருமாள்கோவில் அருகே விஞ்சியம்பாக்கம் ஏரி நிரம்பியதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முட்டியளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் தத்தளித்தபடி செல்கிறது. செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட ஜெ.சி.கே.நகர், அண்ணாநகர் பகுதியில குடியிருப்பை மழைநீர் சூழ்ந்துள்ளது. 300 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு பள்ளி, சமுதாயகூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்புக்குழுவினரும் தயார்நிலையில் உள்ளனர். மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் அரசு துறை அதிகாரிகள் வெள்ள மீட்பு பணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தாம்பரம், பல்லாவரம், அடையாறு கால்வாய் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால் மதகுகளை பகுதிகளை பாதுகாப்பாக வைத்து தண்ணீர் வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 1000 ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் மூலம் ஏரிகள் கரைகளில் மண் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது.
ஏரிகளின் உபரிநீர் பாலாற்றில் கலந்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாங்கொளத்தூர், ரெட்டிப்பாளையம், கரும்பாக்கம் அருகேயுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ள நீர் செல்வதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஈசூர், வாயலூர் பாலாற்று தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது.