பாட்னா: ‘கிட்னி என்பது வெறும் சிறிய சதை. என் தந்தைக்காக எதையும் செய்வேன்’ என லாலுவின் மகள் ரோகினி டிவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பல்வேறு ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் நீதிமன்ற சிறப்பு அனுமதியுடன் சிங்கப்பூரில் சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். தற்போது, டெல்லியில் உள்ள லாலுவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து, சிங்கப்பூரில் உள்ள லாலுவின் மகள் ரோகினி தந்தைக்கு சிறுநீரக தானம் செய்வதற்கு முன்வந்துள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இது தொடர்பாக லாலுவின் மகள் ரோகினி தனது டிவிட்டர் பதிவில், ‘ஒரு சிறிய சதைப்பகுதியை தான் தந்தைக்கு கொடுக்க விரும்புகிறேன். அவருக்காக என்னால் எதையும் செய்ய முடியும். உங்கள் அனைவருக்காகவும் குரல் கொடுப்பதற்காக அப்பா மீண்டும் உடல்நிலை சரியாகி வரவேண்டும் என்று பிரார்த்தியுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.