புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் சீனாவின் அச்சுறுத்தல் இருப்பதாகவும், ஆனால் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக இந்திய ராணுவ தளபதி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கிழக்கு லடாக் பிரச்னை குறித்து பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 30 மாதமாக இந்த பதற்றம் தொடர்கிறது. இதுகுறித்து இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறுகையில், ‘இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில், டெம்சோக் மற்றும் டெப்சாங் எல்லைப் பிரச்னைகள் குறித்து பேசப்படும். இந்த பேச்சுவார்த்தை 17வது சுற்று பேச்சுவார்த்தையை நோக்கி செல்கிறது.
எல்லையில் சீன துருப்புக்களின் எண்ணிக்கை குறையவில்லை. குளிர்காலம் தொடங்கும் போது, சீன துருப்புகளின் குறைய வாய்ப்பள்ளது. கிழக்கு லடாக்கில் நிலைமையை ஒரு வாக்கியத்தில் விவரிக்க வேண்டும் என்றால், நிலைமை கட்டுக்குள் உள்ளது; ஆனால் கணிக்க முடியாததாக உள்ளது. எல்லையில் சீனா தனது கட்டுமானங்களை தொடர்ந்து எழுப்பி வருகிறது. இப்பகுதியில் ஹெலிபேடுகள், விமானநிலையங்கள் மற்றும் சாலைகளை கட்டமைக்கிறது. சமீபத்தில் ஜி695 என்ற நெடுஞ்சாலையை உருவாக்கியுள்ளது.
இந்திய ராணுவத்தை பொருத்தமட்டில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ேளாம். இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் யாவும் மிகவும் கவனமாக கையாளப்படுகிறது. பொதுவாக சீனர்கள் சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளது. இதனை நாம் அறிவோம். இது அவர்களின் இயல்பு. அவர்களின் குணத்தில் கவனம் செலுத்துவதை தவிர்த்து, அவர்களின் படைப்புகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.