தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளில் பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிவிசி தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் கிராமப்புற ஏழை எளிய பட்டியல் இனத்தினர் பழங்குடியினர் மகளிர் ஆகியோர் பொருளாதார மேம்பாட்டிற்கும் சுயமரியாதைக்கும் கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்காற்றி வருகிறது. தங்களின் பெரும் முயற்சியால் தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டு பெருமளவு சுழல் நிதி வழங்கப்பட்டு மகளிர் முன்னேறி வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கங்களின் உறுப்பினர்களுக்கு பட்டியலினத்தினர், பழங்குடியினர் மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதே போன்று தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளிலும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. எனவே இனி வரும் கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு பட்டியல் இனத்தினர், பழங்குடியினர் மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணை வெளியிடும் பட்சத்தில் உண்மையான சமூக நீதி சமத்துவத்தை எட்டுவதில் திமுக அரசின் ஒரு முன் முயற்ச்சியாக அமையும்.
எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளில் பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும்” என தொல் திருமாவளவன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.