தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, குஷி, சாகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருகிறார். அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் யசோதா திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நேற்று முன்தினம் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. சமந்தாவின் நடிப்பையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில், இணையத்தில் குவிந்து வரும் பாராட்டு மழையின் இடையே, தான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தனது ஜிம் பயிற்சியாளர் உடன் யசோதா வெற்றியை ஜிலேபி சாப்பிட்டு கொண்டாடியதையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த வீடியோவில் அவரின் கை மணிக்கட்டு பகுதியில், நரம்பில் மருந்து ஏற்றும் ட்ரிப்ஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தது. அந்த ட்ரிப்ஸ் கருவியுடன் அவர் உடற்பயிற்சி மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, அவரின் எடையை நாட் கணக்கில் குறித்துவைத்துள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
சமந்தா அவரின் பதிவில்,”எனக்கு பிடித்த ஜிலேபியை சாப்பிடும் வகையில், நான் ஒருபோதும் செயலாற்றவில்லை என எனது பயிற்சியாளர் ஜுனைத் ஷேக் நினைத்துள்ளார். ஆனால், தற்போது, யஷோதா படத்தின் வெற்றியை முன்னிட்டும், குறிப்பாக சிறப்பான ஆக்ஷன் காட்சிக்காகவும் இந்த ஜிலேபியை பரிசளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக எனக்கு நடந்த அத்தனை விஷயத்திலும் ஒரு பார்வையாளராக நீங்களும் (பயிற்சியாளர்) இருந்தீர்கள். நீங்கள் என்னை கைவிட்டுவிடவில்லை, நீங்கள் என்னை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதில், பயிற்சியாளருடன் ஜிலேபி சாப்பிடும் புகைப்படத்தை அவர் முதலில் பதிவிட்டுள்ளார். அடுத்து அவரின் எடை குறித்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில், 53 கிலோவில் இருந்து, 50.8 கிலோவை வரை குறைந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து,
சில நாள்களுக்கு முன் சமந்தா அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது. இதுகுறித்து சமந்தா, கடந்த அக். 29ஆம் தேதி அன்று அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அரிய வகை நோய்களில் ஒன்றான இதில் இருந்து விரைவில் குணமடைவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் சோர்வும், தசை வலியும் அதிகமிருக்கும் என கூறப்படுகிறது. இந்த நோயில் இருந்து முற்றிலுமாக குணமடைய சற்று காலமெடுக்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் சிறிதுநேரம் நின்றாலோ அல்லது நடந்தாலோ அவர்கள் சோர்வாகி அடிக்கடி மயக்கமிடவும் வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை மேற்கொண்டுவரும் போதும், சமந்தா தளர்ந்துவிடாமல் உடற்பயிற்சி செய்வது பலருக்கும் வாழ்வில் ஊத்வேகத்தை அளிப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.