கோவையில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி வாலிபர் காயமடைந்துள்ளார்.
கொல்கத்தாவை சேர்ந்த பிஜாய்(35) என்பவர் கோவை தியாகி குமரன் வீதி பகுதியில் தங்கி தங்க நகை பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பிஜாய் சமைப்பதற்காக கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார்.
அப்பொழுது எரிவாயு கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமானது. இதையடுத்து பிஜாயின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், தீயில் பலத்த காயமடைந்த பிஜாயை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதில் சிலிண்டர் சரியாக மூடாமல் வைத்திருந்ததால் கியாஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.