`குற்றவுணர்ச்சியாக இருக்கிறது; நான் திருந்தி வாழ உதவி செய்யுங்கள்’ என்றொரு வாசகரின் மெயில். “கல்லூரி நாள்களில் நண்பர்களுடன் சேர்ந்து, ஆபாசப்படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். விளைவு, என்னுடன் படிக்கும் மாணவிகளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினேன். நல்லவேளையாக, இதுவரை யாரிடமும் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால், சுய இன்பம் செய்யும் பழக்கம் வந்து விட்டது. இதில், மிகப்பெரிய குற்றமாக, உறவுமுறையில் சகோதரி முறை கொண்டவரை நினைத்து சுய இன்பம் செய்து விட்டேன். அன்றிலிருந்து நரகத்தில் இருப்பதைப்போல உணர்கிறேன். மிகுந்த குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. நான் திருந்தி வாழ உதவி செய்யுங்கள் டாக்டர்” என்கிறது அந்த மெயில்.
இவருடைய பிரச்னைக்குத் தீர்வு சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.
“ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்னைகளில் சிக்கிக் கொண்டுள்ளீர்கள். ஏதோவோர் ஆர்வத்தில் ஒன்றிரண்டு முறை ஆபாசப்படங்கள் பார்ப்பதென்பது பரவாயில்லை. அதற்கு அடிமையாகி, உடன் படிக்கும் மாணவிகளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் அளவுக்குச் சென்றிருக்கிரீர்கள். அதேபோல சுய இன்பம் தவறல்ல… ஆனால், சகோதரி போன்ற உறவில் உள்ள பெண்ணை நினைத்துக்கொண்டு என்றால், மிகப்பெரும் பிரச்னை இது. இதை இன்செஸ்ட் (Incest) என்போம். ஆதி காலத்திலிருந்து எந்தச் சமுதாயமும் இப்படிப்பட்ட உறவுகளை அனுமதிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தவிர, இது சட்டப்படி குற்றம்.
`நான் தனி மனிதன்; எப்படி வேண்டுமானாலும் இருப்பேன்; அது என் உரிமை’ என்பதெல்லாம் உங்கள் விஷயத்தில் அடங்காது. `சகோதரி உறவு என்றாலும் சரி, மற்ற பெண்கள் என்றாலும் சரி, சிந்தனையில் தவறாக நினைத்தாலும், கற்பனை செய்தாலும் குற்றம்தான்.
அதே நேரம், நீங்களே இதைத் தவறு என்று உணர்ந்துவிட்டீர்கள் என்பதால், உங்களுடைய பிரச்னை பாதி தீர்ந்துவிட்டது என்று அர்த்தம். உடனே, மனநல ஆலோசகரைச் சந்தித்து மனம் விட்டுப் பேசுங்கள். இனி, இப்படி கற்பனை செய்ய மாட்டேன் என முடிவெடுங்கள். மீறி யோசனை வந்தால், வேறு ஏதாவது நல்ல நடவடிக்கைகளில் உங்கள் கவனத்தை மாற்றுங்கள். தயங்காமல் மனநல ஆலோசகரைச் சந்தித்து ஆபாசப்படங்கள் பார்ப்பது, சுய இன்பம் செய்வது, மற்ற பெண்களைத் தவறாக நினைப்பது போன்றவற்றிலிருந்து மீள்வதற்கான ஆலோசனைகளைப் பெறுங்கள்” என்றார்.