காமெடியில் மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரம், பாடுவது, நடனம் ஆடுவது என வடிவேலு முழுமையான கலைஞன். 90களிலிருந்து அடுத்த 20 வருடங்கள் வடிவேலு இல்லாத படங்களே இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியேக்கூட சந்திரமுகி படம் ஆரம்பிக்கும்போது அதன் இயக்குநர் பி.வாசுவிடம் முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்குங்கள் என்றார். அந்த அளவு வடிவேலு பிஸி. வடிவேலு யாருடன் நடித்தாலும் அந்த காம்போ அதிரிபுதிரி ஹிட்டடித்தது.இப்படி சென்றுகொண்டிருர்ந்த வடிவேலு கதாநாயகனாக அறிமுகமாகி மற்ற காமெடியன்களும் கதாநாயகனாக ஜெயிக்கலாம் என்ற விதையையும் போட்டார்.
இப்படி அசுர வேகத்தில் சுழற்றியடித்த வைகை புயல் அரசியலில் களம் இறங்கினார். அங்கிருந்து புயலின் வலு குறைந்து ஒருகட்டத்தில் திரையில் காணாமலே போனது. இருந்தாலும் அனைத்து வீடுகளின் டிவிக்களிலும் வடிவேலுவின் காமெடி ஓடிக்கொண்டிருக்க காலம் டிஜிட்டல் காலமாக மாறியது. இனி வடிவேலு அவ்வளவுதான் என பலர் ஆரூடம் கூற ஸ்மார்ட் ஃபோன்களிலும் வைகை புயலே வீசியது. அப்போதுதான் பலரும் புரிந்துகொண்டனர் வடிவேலு என்ற கலைஞனுக்கு அழிவே இல்லை என்று.
இந்தச் சூழலில் சில பிரச்னைகளால் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். ஒருவழியாக அனைத்து பஞ்சாயத்துகளும் முடிந்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்களை வடிவேலுவே பாடியிருக்கிறார்.
இந்நிலையில் படம் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது அதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படமானது டிசம்பர் மாதம் 9ஆம் தேதி வெளியாகுமென்று கூறப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றனர். இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய படத்தை தணிக்கைக்கும் அனுப்பிவிட்டார்களாம். முன்னதாக நவம்பர் மாதத்திலேயே படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.