முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி, அதிமுக கொள்கைபரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் புகழேந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “ஓபிஎஸ் என்னை கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்ததை அடுத்து அம்மா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்.
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் நியமிக்கப்பட்டிருந்த போது அவரை மாற்ற வேண்டுமென்றவர் எடப்பாடி பழனிசாமி. சிலை கடத்தலில் 2 அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னதற்குப் பிறகு தான் உள்துறை அமைச்சராக இருந்த பழனிசாமி பொன் மாணிக்கவேலை மாற்ற முயன்றார்.
சிலை கடத்தலில் சம்மந்தப்பட்ட அந்த 2 அமைச்சர்கள் யார் என்பதை பொன் மாணிக்கவேல் வெளியிட வேண்டும். அந்த 2 பேரில் ஒருவர் எடப்பாடி பழனிசாமி என்று சந்தேகிக்கிறோம். சிலை கடத்தலில் பழனிசாமியின் பங்கு என்ன என்பதை பொன் மாணிக்கவேல் விளக்க வேண்டும். உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டும்.
கொடநாடு கொலை, கொள்ளை என இன்னும் எத்தனை வழக்குகளில் பழனிசாமி இருக்கப் போகிறார் என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM