நந்திகிராம்: ஜனாதிபதியின் தோற்றம் குறித்து விமர்சித்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் அகில் கிரி மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம் தொகுதியில் நேற்று முன்தினம் மாலை நடந்த கட்சி பேரணி ஒன்றில் அமைச்சர் அகில் கிரி கலந்து கொண்டார். பொதுமக்களிடையே பேசிய அவர், ‘‘எனது தோற்றம் நன்றாக இல்லை என்று பாஜ கூறுகிறது. யாரையும் அவருடைய தோற்றத்தை வைத்து நாம் எடைப்போடக்கூடாது.
ஜனாதிபதியின் பதவியை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் ஜனாதிபதியின் தோற்றம் எப்படி இருக்கிறது?’’ என்றார். அமைச்சர் அகில் கிரி பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதால், நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அகில் கிரி தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார். அவர், ‘‘ஜனாதிபதியை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக நான் பேசவில்லை. பாஜ தலைவர்கள் என்னை வார்த்தைகளால் தாக்கியதற்கு பதில் அளித்தேன். எனது தோற்றத்தை வைத்து தினமும் நான் விமர்சிக்கப்படுகிறேன்.
யாராவது நான் ஜனாதிபதியை அவமரியாதை செய்ததாக நினைத்தால் அது தவறு. இது போன்ற கருத்தை தெரிவித்ததற்காக நான் மன்னிப்பு கேடடுக்கொள்கின்றேன். நமது நாட்டின் ஜனாதிபதி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது’’ என்றார். எனினும், ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறுகையில், ‘‘முதல்வர் மம்தா பானர்ஜி இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். திரிணாமுல் அமைச்சர் அகில் கிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ என கூறி உள்ளார். இதுதொடர்பாக கொல்கத்தாவில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.