தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழையின் தீவிரம் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வளிமண்டல சுழற்சியாக வலுவிழந்து அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும். வருகிற 15ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய மட்டுமே வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வருகிற 16ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.