சென்னை: தமிழகத்தின் மீது பிரதமர் மோடி தனி கவனம் செலுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன75-வது ஆண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமித் ஷா, அந்நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கியதுடன், பவள விழா நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். தொடர்ந்து, 3டி வடிவ பவள விழா ஆண்டு நினைவு சின்னத்தைகாணொலி வாயிலாகத் திறந்துவைத்து அவர் பேசியதாவது:
அனைத்திலும் 100 சதவீத வெற்றிவாகை சூடுபவர் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத் துணைத் தலைவர் என்.சீனிவாசன். கடும் உழைப்பாளி. பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. 2025-ல் இந்தியாவின் வளர்ச்சி 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். உலக பொருளாதார நாடுகள் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்து, 5-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. 2027-ல் 3-வது இடத்தைப் பிடிக்கும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் கழிப்பறை, மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு வழங்குவது மட்டுமின்றி, வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குவது என, ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான பயன்கள் சென்றடைய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரியாக ரூ.1 லட்சத்து51 ஆயிரத்து 780 கோடி கிடைத்துள்ளது. யுபிஐ செயலி மூலம் ரூ.12.11 லட்சம் கோடி அளவுக்கு பணமில்லா பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
பிரதமர் மோடி தமிழகம் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு முன்பு மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கும் நிதி ரூ.35 ஆயிரம் கோடி. தற்போது அது ரூ.95 கோடியாக (171 சதவீதம்) அதிகரித்துள்ளது. ஆண்டு வரிபகிர்மானத் தொகையாக தமிழகத்துக்கு இதற்கு முன்பு ரூ.62 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. தற்போது அது ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 454 கோடியாக அதிகரித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கான நிதி ரூ.8,900 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் 64 சாலைப் பணிகளுக்காக, ரூ.47,581 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெய்வேலி மின் உற்பத்திக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டத்துக்கு ரூ.3,770 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,450 மாணவர்கள் எம்பிபிஎஸ் பயிலும் வகையில், 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் மொழி உலகின் மிக மூத்த, தொன்மையான மொழி. மிகப் பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ளது. இது தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே பெருமையாகும்.
பிற மாநிலங்களில் தாய்மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் உள்ளன. அதுபோல, மருத்துவம், பொறியியல் பாடத் திட்டங்களை தமிழில் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, ‘‘இந்திய சுதந்திரமும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து கடந்து வந்த பாதையும், இந்தியாவின் கட்டமைப்பில் இந்நிறுவனத்தின் முக்கியப் பங்கும் குறிப்பிடத்தக்கவை’’ என்றார்.
தலைமை வகித்து இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத் துணைத் தலைவர் என்.சீனிவாசன் பேசும்போது, ‘‘சுரங்கம், தாது மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தில், சுண்ணாம்புக் கற்களைத் தோண்டும் நிலம், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சொந்தமாக இருந்தால் மட்டுமே சுரங்கம் தோண்ட அனுமதிவழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு ஒருவர் நிலத்திலும், குத்தகை அடிப்படையில் சுரங்கம் தோண்ட அனுமதிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்’’ என்றார்.
இந்த விழாவில், மத்திய தகவல்ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆந்திர மாநில நிதியமைச்சர் புகண்ணா ராஜேந்திரநாத், நிறுவன செயல் தலைவர் பிரகாஷ் சிங், முழு நேர இயக்குநர் ரூபா குருநாத், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.