தரங்கம்பாடி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் இரண்டாவது நாளாகவும் மழை நீர் வடியாததால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைஉடையார் கோவில்பத்து கிராமத்தில் காந்திநகர், நேருநகர், தலைச்சங்காடு, மனவெளி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 12ஆம் தேதி பெய்த அதீத கன மழையால் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் இரண்டாவது நாளாக மழை நீர் வடியாததால் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்படைந்துள்ளது. அதேபோல் காந்திநகர் பகுதிக்குச் செல்லும் கிராம சாலை மழை நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதால் அந்த கிராமம் தீவு போல் காட்சியளிக்கிறது. இதையடுத்து இப்பகுதியில் உள்ள ராஜேந்திரன் வாய்க்கால், நாவல் கன்னி வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் இரண்டாவது நாளாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதையடுத்து கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தவித்து வருகின்றனர். உடனடியாக தற்காலிகமாக வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி மழை நீரை விரைவாக வடிய வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM