திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 40 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆந்திரா, தமிழகம், தெலங்கானா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது.
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம், நேற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்தது. இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. எஸ்எம்சி கட்டிடம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் இலவச தரிசன வரிசையில் 40 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ₹300 டிக்ெகட் பெற்ற பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.