திங்கள்சந்தை: குமரி மாவட்டம் இரணியல் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது புது மனைவி ‘‘ஸ்லோ பாய்சன்” கொடுத்து தன்னை கொலை செய்ய முயல்வதாக வீடியோ மூலம் கதறும் காட்சி வெளியாகி அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அது பற்றிய விவரம் வருமாறு:
இரணியல் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் ஆகி உள்ளது. இதைதொடர்ந்து அந்த வாலிபர் வயிற்று வலி, மயக்கம் என அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த வாலிபர், தனது புது மனைவியே ‘‘ஸ்லோ பாய்சன்” கொடுத்து கொல்ல முயல்வதாக வீடியோ மூலம் பேசி இருக்கிறார். அது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோ காட்சியில் வாலிபர் பேசி இருப்பதாவது:
எனக்கும் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சந்தோஷமாக தான் வாழ்க்கை நடத்தினோம். ஆனால் அவள் நடித்துக் கொண்டு இருந்திருக்கிறாள் என்பது பின்னர் தான் தெரியவந்தது. எனது மனைவி திருமணத்திற்கு முன்பு ஒருவரை காதலித்துள்ளார். சமீபத்தில் மனைவியின் செல்போனை எதார்த்தமாக பார்த்தபோது தற்போதும் அந்த காதலனுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. அந்த தொடர்பை வலுப்படுத்த ‘‘ஸ்லோ பாய்சன்” கொடுத்து என்னை கொல்ல பார்க்கிறாள்.
அதற்கான சாட்சிகள் என்னிடம் உள்ளது. அதை பார்த்ததால்தான் நான் இப்போது உயிருடன் இருக்கிறேன். இல்லை என்றால் ஸ்லோ பாய்சன் கொடுத்து என்னை கொன்று விட்டு தற்கொலை செய்ததாக கூறி இருப்பாள். இல்லையெனில் இந்த மருந்தின் வீரியத்தில் நான் ஏதாவது விபத்தில் சிக்கி இறந்து இருப்பேன். ஆனால் இது எதுவும் நடக்காதது போல் என் மனைவி இருக்கிறாள். இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை. போலீசார் நடவடிக்கை எடுத்து ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
‘ஏதும் வந்தா மருந்து மேல போட்டுரலாம்’
அந்த பெண் தனது காதலனுடன் வாட்ஸ் அப் சாட்டில் உரையாடலில் சில பகுதி:
புதுப்பெண்: ‘அது செக் பண்ணும்போது டேப்லட் சாப்பிட்டிருக்குன்னு தெரியாதுல்ல’,
காதலன்: ‘ஏதும் வந்தா மருந்து மேல போட்டுரலாம்’
புதுப்பெண்: ‘இப்போ வேற எல்லா இடத்திலேயும் காதலன் காதலியை கொல பண்றான், காதலி காதலன கொல செய்யுறா, இதையும் அந்தமாதிரி நெனச்சி விசாரிச்சிற கூடாது’
காதலன்: ‘ஆமாமா அத பாத்தாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு’.
புதுப்பெண்: தல சுத்திட்டி ஒரு மாதிரி இருந்தான்,மயங்கல .
காதலன்: ‘ கண்டினியூ பண்ணினா கான்சியஸ் இல்லாம ஆகும் ’ ‘ரொம்ப பண்ணுனா… எல்லாத்தையும் கலந்து கொடுத்துடு, மொத்தமா போகட்டும், வரத பார்த்துக்கலாம்’.
இவ்வாறு வாட்ஸ் அப் சாட்டிங்கில் உள்ளது.