சென்னை: நாகை, மயிலாடுதுறையில் இன்றிரவுக்குள் மின்விநியோகத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சீர்காழியில் எடமணல் துணை மின் நிலையத்தை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், “சீர்காழி உள்ளிட்ட நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்றிரவுக்குள் மின்விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படும். சேதமடைந்த மின்மாற்றிகளை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
50 ஆயிரம் பணியிடங்கள் மின் வாரியத்தில் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு நிதித்துறையின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த உடன் பணிகள் தொடங்கும். இந்த மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஆயிரம் மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. 400 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 600 சாய்ந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.
மின் மாற்றிகளை மாற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் எந்த வித பணமும் வசூலிப்பது இல்லை. எந்த புகாராக இருந்தாலும் மின்னகம் மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். பணி செய்யாத மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இன்று (நவ.13) காலை 6 மணிக்கு எங்களை தொடர்பு கொண்டு மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கினார்” இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.