உச்ச நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என பரிந்துரைக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் யு.யு.லலித்துக்கு கடிதம் எழுதியிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த நீதிபதி யார் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது. எனவே, கொலீஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசித்து இவர்களில் ஒருவரை தலைமை நீதிபதி பரிந்துரைக்க வேண்டும்.
அதன்படி, அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பெயரை யு.யு.லலித் பரிந்துரைத்தார். இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வழக்கமாக, தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சிகளில் பிரதமர்கள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், சந்திரசூட் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை.
முன்னாள் தலைமை நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் முதல் யு.யு.லலித் வரை தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை என்ற நிலையில், சந்திரசூட் பதவியேற்பு விழாவில் மட்டும் அவர் கலந்து கொள்ளாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பேற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளாததற்கான காரணங்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டெல்லி பாஜக வட்டாரத் தகலவல்கள் கூறுகையில், தலைமை நீதிபதி சந்திரசூட் பொறுப்பேற்ற கடந்த 9ஆம் தேதியன்று பிரதமர் மோடி, இமாச்சலப் பிரதேச தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டிருந்தார். அம்மாநிலத்தில் இந்த முறை மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜகவினர் தீவிர பிரசாரம் மேற்கொண்ட நிலையில், பிரதமர் மோடி ஏற்கனவே திட்டமிட்ட பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டதாலேயே, நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை என்கின்றனர். மேலும், இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமும், நீதிபதி சந்திரசூட்டிற்கும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இதுபோன்ற காரணங்களை கூறி பாஜகவினர் சப்பைக்கட்டு கட்டுவதாக எதிர்த்தரப்பினர் கூறுகின்றனர். சந்திரசூட்டின் பல தீர்ப்புகள் மத்திய அரசுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால்தான் பிரதமர் மோடி அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாட்டின் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவை விட பிரதமராக இருக்கும் ஒருவருக்கு தேர்தல் பிரசாரக் கூட்டம் முக்கியமானதல்ல; பதவியேற்பு விழா ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றுதான். எனவே, பிரதமர் மோடி நினைத்திருந்தால், தேர்தல் பிரசார நிகழ்ச்சியை தள்ளி வைத்துவிட்டு, பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டிருக்கலாம். மாறாக, பிரதமர் மோடியோ தேர்தல் பிரசாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் அவர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.