ஆண்டிபட்டி: வைகை அணையில் நீர்வரத்து அதிகரித்து, நேற்றுமுன்தினம் இரவு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனால், 5 மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை இந்த ஆண்டில் இரண்டு முறை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததது. அணையின் நீர்மட்டமும் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு 70 அடியாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து விநாடிக்கு 3,780 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து இரவில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இரவு 11 மணியளவில் 10,538 கனஅடி நீணீர் வெளியேற்றப்பட்டது.
பின்னர் நள்ளிரவில் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் 2 மணியளவில் 7,133 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணையில் இருந்து 3,810 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 ஆயிரம் கனஅடிக்கும் கூடுதலாக உபரீநீர் வெளியேற்றப்பட்டதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.